ADDED : ஜூன் 20, 2024 12:28 AM

சென்னை : 'கள்ளச்சாராயத்தை ஒழிக்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், த.மா.கா., தலைவர் வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
பழனிசாமி:
தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளேன். கள்ளச்சாராயத்தால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னும், அதை ஒழிக்க தி.மு.க., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
கள்ளச்சாராயம் இல்லை, அது மெத்தனால் என்று சொன்னதுபோல், மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும், அதை ஒழிக்க வேண்டும்.
அண்ணாமலை:
கள்ளச்சாராய வியாபாரிகளுடன், தி.மு.க., அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விபரம், கடந்த ஆண்டே தெரிய வந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகம் முழுதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறன் இல்லாமல், தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்கு, மதுவிலக்கு துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும், முதல்வர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தினகரன்:
கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தனர். அதன் பின்னும் அதை ஒழிக்க, அரசு நடவடிக்கை எடுக்காததால், உயிரிழப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
ஒவ்வொரு முறை ஏற்படும் கள்ளச்சாராய இறப்புகளுக்கு பின், அரசு நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம், போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம், அதிரடி சோதனை என்ற கபட நாடகத்தை வாடிக்கையாகக் கொண்டிருக்கும், தி.மு.க., அரசின் செயல்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை.
இம்முறையும் அரசு நிர்வாகத்தின் தவறை மறைக்க காரணம் தேடாமல், ஊழல் முறைகேடு புகார், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் வரிசையில் இணைந்திருக்கும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, இனியாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசன்:
இனிமேல் கள்ளச்சாராயம் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்பதற்காக, மாநிலம் முழுதும் காவல் துறையினரின் தொடர் கண்காணிப்பு அவசியம். தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த, சட்டம் - ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பாலகிருஷ்ணன்:
போலீஸ் துறையின் மெத்தனம் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு இல்லாமல், இது நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் கடமை தவறிய போலீஸ் துறையினர் உட்பட, தவறிழைத்தவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க, தமிழகம் முழுதும் மாவட்ட அளவில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதுவிலக்கு தனிப்பிரிவை தீவிரப்படுத்த வேண்டும்.
பிரேமலதா:
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவது என் லட்சியம் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராயத்தை தடுக்க கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. ஏற்கனவே கஞ்சா, குட்கா விற்பனையால், தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது. தெருவிற்கு தெரு டாஸ்மாக் மதுக் கடைகள் இருக்கும்போது கள்ளச்சாராயமும் அதிகரித்துள்ளது. மது, கஞ்சா, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமான்:
கஞ்சா, குட்கா, அரசு மது விற்பனையை தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால், பல உயிர்கள் பலியாகியுள்ளன. தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. தி.மு.க., மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனையாக இது உள்ளது.
செல்வப்பெருந்தகை:
ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து, 22 பேர் உயிரிழந்து, ஒரு ஆண்டிற்குள் அதேபோன்று துயரமான சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதை விற்பதால் உயிர் பலி ஆவதும் தொடர்கதையாகியுள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், அதை விற்பவர்கள் மீது அரசு இரும்புக்கரத்தால் ஒடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
சாக்லேட் சுவையில் சரக்கு!
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தவே, 'டாஸ்மாக்' மது விற்கப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனாலும், கள்ளச்சாராயம் விற்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல் துறையும், அரசும் முடங்கியுள்ளன. கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கலெக்டர் கூறியிருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சியே இது.
கல்வராயன் மலைப்பகுதிகளில், 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் அளவுக்கு அத்தொழில் நவீனமடைந்துள்ளது. இவற்றை மூடி மறைத்து, கலெக்டர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். கள்ளச்சாராய விற்பனைக்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும், உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்,
திசை திருப்பும் மாவட்ட அதிகாரிகள்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கையின்மையால் தற்போது கள்ளச் சாராயத்தால் பலர் இறந்துள்ளனர். இவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஆனால் கலெக்டர், எஸ்.பி., ஆகியோர், கள்ளச்சாராயத்தால் இறந்ததை மறைக்க, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வேறு காரணங்களால் இறந்ததாக திசை திருப்புகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே, கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இறந்தனர் என்று தெரிவிக்கின்றனர். ஒரே நாளில் இத்தனை பேர் வயிற்றுப் போக்கால் எப்படி இறந்து போக முடியும்? பிரேத பரிசோதனை ஆய்வில் தெரிய வரும்.
மரக்காணத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கியது போல, கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களுக்கும் வழங்க வேண்டும். கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனையை தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.