ADDED : ஜூன் 23, 2024 04:19 AM

''தமிழக ரயில்வே திட்டங்கள் மற்றும் சாலை திட்டங்களுக்கு, போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்,'' என, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
டில்லியில் நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதித் துறை அமைச்சர்களுடன், மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டம் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். அதில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
கடந்த 2021 - 22ம் ஆண்டு பட்ஜெட் உரையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணியை, 63,246 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு திட்டமாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, நடப்பாண்டு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சீரமைப்பு பணிகளை செய்ய, தமிழக அரசுக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களில், மத்திய அரசு குறைந்தபட்சம் 50 சதவீதம் பங்களிப்பை வழங்க வேண்டும்.
பெரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை பொறுத்தவரை, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. அடுத்தடுத்து வந்த மத்திய அரசு பட்ஜெட்டில், குறைந்த எண்ணிக்கையிலான ரயில்வே திட்டங்களே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை வழித்தடம்; திருப்பத்துார் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய வழித்தடம்; அருப்புக்கோட்டை வழியாக மதுரை - துாத்துக்குடி; மீஞ்சூர் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் - சிங்கபெருமாள் கோவில் - மதுராந்தகம் வழித்தடம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான உயர்மட்ட சாலை; செங்கல்பட்டு - திண்டிவனம் வரையிலான உயர்மட்ட சாலை ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும். சென்னை - கன்னியாகுமரி சாலையை விரிவாக்கும் புதிய திட்டத்திற்கு, போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் குழு -