UPDATED : மார் 28, 2024 06:47 AM
ADDED : மார் 28, 2024 05:01 AM

பி.ஏ.பி., திட்டம் என்பது மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம், மேல் ஆழியாறு, கீழ் ஆழியாறு, திருமூர்த்தி, இடைமலையாறு, ஆனைமலையாறு, நல்லாறு என, 12 அணைகளை கட்டுவதற்கான திட்டத்துடன் துவங்கப்பட்டது.
ஏற்கனவே தமிழகம் ஒன்பது அணைகளும், கேரளா இடைமலையாறு அணையும் கட்டி விட்டது. மீதம் இருப்பது ஆனைமலை ஆறு- - நல்லாறு திட்டம் மட்டுமே. இத்திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு கிடைக்கும் பாசன நீரானது ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்க வாய்ப்புள்ளது.
இரண்டு தலைமுறை விவசாயிகள் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால், தமிழகத்தை இதுவரை ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் அரசுகள் இத்திட்டத்தை விவசாயிகளின் பிரச்னை என்ற வகையிலேயே கிடப்பில் போட்டுள்ளன. விவசாயத்திலிருந்து பெரிதாக வருமானம் கிடைக்காது என்ற எண்ணத்தில் இதனை கண்டு கொள்வதில்லை.
கட்சியினர்உணர்வதில்லை
ஆனால், இது எதிர்கால சந்ததியினரின் குடிநீர் பிரச்னை என்ற தொலைநோக்குப் பார்வை எந்த அரசியல் கட்சிகளிடமும் கிடையாது. தற்பொழுது கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., பாசன பகுதிகளின் குடிநீர் ஆதாரம் பி.ஏ.பி., தண்ணீரே ஆகும். இது எதிர்கால திருப்பூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இதனை எந்த அரசியல்வாதியும் உணரும் மன நிலையில் இல்லை.
இன்றைய திருப்பூரின் பரப்பளவு, 160 சதுர கிலோ மீட்டர். ஆண்டு ஏற்றுமதி, 34 ஆயிரம் கோடி ரூபாய். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை விரைவில் எட்ட கடுமையாக உழைத்து வருகின்றனர்.
ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் பொழுது திருப்பூரின் பரப்பளவு மூன்று மடங்கு உயர வேண்டும். ஏனெனில் பனியன் தொழிலுடன் வாகனம், ஹோட்டல், சுற்றுலா, குடியிருப்பு என பிற தொழில்களும் வளரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் திருப்பூரின் பரப்பளவு கிட்டத்தட்ட, 500 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அப்படியானால், இன்றைய பல்லடம், அவிநாசி, பொங்கலுார், காங்கயம், ஊத்துக்குளி போன்ற பகுதிகள் திருப்பூருக்குள் ஐக்கியமாகிவிடும். சென்னையின் பரப்பளவே, 426 சதுர கிலோமீட்டர் தான். தற்போது சென்னையின் மக்கள் தொகை, 50 லட்சம் இருக்கக்கூடும்.
பரப்பளவுஉயர வாய்ப்பு
திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது, 20 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். வருங்காலத்தில் சென்னைக்கு இணையாக, 50 லட்சமாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. திருப்பூரின் மக்கள் தொகை உயரும்போது, அவர்களுக்கான குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.
தற்போதைய மக்கள் தொகைக்கே திருப்பூரில் போதுமான குடிநீர் கொடுக்க முடிவதில்லை. திருப்பூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளனர். நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு முக்கிய காரணமாக விளங்குவது பி.ஏ.பி., ஆகும்.
தற்போதைய நிலை இவ்வாறு இருக்கும்போது வரும் காலத்தில், 50 லட்சம் மக்களுடன் திருப்பூர் நகரம் வளரும் பொழுது அதன் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம். இதற்கு தற்போது இருந்தே திட்டங்களை தீட்ட வேண்டும். ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்போது கிடைப்பதை விட பாதிக்கு பாதி அதிக தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதனை நிறைவேற்றினால் திருப்பூரை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும். வரும் 2050ல் உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும்; அது தண்ணீருக்கான போராக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அது திருப்பூருக்கும் பொருந்தும்.
எனவே, தொலைநோக்கு பார்வையும், தொகுதிக்கான எதிர்கால திட்டம் கொண்ட வேட்பாளரரை ஆதரிப்பது வாக்காளர்களின் கைகளில் தான் உள்ளது.
வருங்காலத்தில் சென்னைக்கு இணையாக, மக்கள் தொகை 50 லட்சமாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. திருப்பூரின் மக்கள் எண்ணிக்கை உயரும்போது, அவர்களுக்கான குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது
- நமது நிருபர் -