தேர்தல் பண பட்டுவாடா புகார் எதிரொலி: நிர்வாகிகளை மாற்றுகிறார் அண்ணாமலை
தேர்தல் பண பட்டுவாடா புகார் எதிரொலி: நிர்வாகிகளை மாற்றுகிறார் அண்ணாமலை
ADDED : மே 06, 2024 12:34 AM

லோக்சபா தேர்தல் வரவு, செலவு கணக்கு விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ.,வில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், மாநில, மாவட்ட நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தரவும், அவர் திட்டமிட்டுள்ளதால், நிர்வாகிகள் பட்டியலில் இடம் பிடிக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், பூத் கமிட்டி பணிகளுக்கு கட்சி மேலிடத்தில் இருந்து, பெரும் தொகை வழங்கப்பட்டது.
தென்சென்னை, மத்திய சென்னை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பூத் கமிட்டிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை கொடுக்காமல், நிர்வாகிகள் சுருட்டி உள்ளனர். பணம் பதுக்கிய விவகாரம், மத்திய உளவுத்துறை வாயிலாகவும், வேட்பாளர்கள் தரப்பில் இருந்தும் தேசிய தலைமைக்கு சென்றுள்ளது.
பூத் கமிட்டிக்கு பணம் வழங்காத விவகாரத்தில், வேலுார் தொகுதியில் பேரணாம்பட்டு ஒன்றிய பா.ஜ., அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டது.
மத்திய சென்னை மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுக்குள் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக, அம்மாவட்ட நிர்வாகியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
தேர்தல் வரவு, செலவு கணக்கு விவகாரம், தேர்தல் பணிகளில் உள்குத்து விவகாரத்தால், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை மாற்ற வேண்டும் என்ற போர்க்கொடி, கட்சிக்குள் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பதவி ஏற்று, வரும் ஜூலை, 16ல் மூன்றாண்டு நிறைவு பெறுகிறது. அவர் இரண்டாவது முறையாக மாநில தலைவர் பதவிக்கு நீட்டிக்கப்பட உள்ளார். மாநில நிர்வாகிகள் பதவியேற்று, நாளையுடன் இரண்டு ஆண்டுகள் முடிகின்றன.
எனவே, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் அல்லது நீட்டிப்பு வழங்க வேண்டும். அதனால், ஜூலை இரண்டாவது வாரத்திற்குள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை அவர் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அண்ணாமலை தலைமையில் தான், இந்த ஆண்டு டிசம்பரில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல்; 2026 சட்டசபை தேர்தலையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிக சீட்டுகளில் பா.ஜ., போட்டியிட வேண்டும் என்பதால், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.
எனவே, கட்சியில், 10 ஆண்டு அனுபவம் உள்ளவர்களை வேட்பாளர்களாக, ஓராண்டுக்கு முன் தேர்வு செய்து, அவர்களை தொகுதிகளுக்கு அனுப்பி, கட்சி பணிகளை தீவிரப்படுத்த வைக்க வேண்டும்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் பதவிகளிலும், இளைஞர்களுக்கும் அதிக அளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என, அண்ணாமலை, தேசிய தலைமைக்கு பரிந்துரைத்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
- நமது நிருபர் -.