UPDATED : மார் 15, 2025 07:27 AM
ADDED : மார் 15, 2025 06:57 AM

சுந்தரராமன், தலைவர், சைமா:
தமிழக ஜவுளித் துறை , கடந்த சில ஆண்டுகளாக சிரமத்தில் இருந்து வருகிறது. இச்சூழலில் ஜவுளித் துறையின் வேண்டுகோள்களை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவித்து, அதன் வாயிலாக தொழிலின் போட்டித் திறனையும் மதிப்புக் கூட்டுத் திறனையும் மேம்படுத்தியதற்கு மாநில அரசுக்கு நன்றி.
3 ஆண்டுகள் மற்றும் அதற்கும் அதிக பழமையான சாதாரண விசைத்தறிகளைப் புதுப்பித்து, நாடா இல்லாத தறிகளாக மாற்ற ரூ.30 கோடியை அறிவித்திருப்பது, குறைந்த செலவில் அதிக தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்ய வழிவகுத்துள்ளது.
ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தித் துறைக்கு, பொது வசதி மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. தானியங்கி முறையில், கம்ப்யூட்டரில் கையாளக்கூடிய துணி வெட்டும் இயந்திர நிறுவனங்களை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது,திருப்பூர், கரூர், விருதுநகர், சென்னை மற்றும் பிற பகுதியில் உள்ள ஜவுளி நகரங்களுக்கு பயனளிக்கும். இந்த தானியங்கி இயந்திரங்கள், உற்பத்திறனை 7 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.
ஜவுளித் துறையின் விடியலாகக் கருதப்படும் தொழில்நுட்ப ஜவுளித் துறைக்கென, 'தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்க'த்துக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, ஜவுளி உற்பத்தியாளர்களை இத்துறைக்குள் ஈர்ப்பதோடு, புதிய முதலீடுகளையும் கணிசமாக ஈர்க்கும். தறிக்கூடங்கள், பொதுவசதி மையம், ஏற்றுமதிக்கான தர ஆய்வுக்கூடம் ஆகியவற்றுக்காக ரூ.20 கோடி ஒதுக்கியதற்கு அரசுக்கு நன்றி.
தமிழக உற்பத்தித் துறையின் உலகளாவிய போட்டித் திறனை தக்க வைக்கும் வகையில், அறிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிலேயே தனித்துவமானது.
பசுமை பாதுகாப்பது அவசியம்
மணிகண்டன், அறங்காவலர், குளங்கள் பாதுகாப்பு அமைப்பு:
கடந்த பட்ஜெட்டில் ஆற்றின் கரைகளில் பசுமை பாதை அமைக்கப்படும் என, அறிவித்து இருந்தனர். அது இப்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. கரையில் ரோடு போட்டு வாகனங்கள் செல்ல வழி செய்வது இயற்கைக்கு எதிரான விஷயமாகும். ஆறு அதன் இயல்பு மாறாமல் இருக்க வேண்டும். கோவை நகரம் விரிவடைந்து வருகிறது. அதனால் மரங்கள் நட்டு வளர்த்து ஆற்றின் பசுமை மாறாமல் இயற்கையாக பராமரிப்பது அவசியம். ஆற்றை நம்பி பல உயிரினங்கள் வாழ்க்கின்றன. அதற்கு தொந்தரவு இல்லாமல் உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.
வரலாற்று ஆதாரம் கிடைக்கும்
சுதாகர், தலைவர், யாக்கை மரபு அறக்கட்டளை:
கோவை வெள்ளலுார் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடத்த போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வெள்ளலுார் ஒரு முக்கியமான தொல்லியல் களம். ரோமானிய நாணயங்கள் இங்கு நிறைய கிடைத்துள்ளன, முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல வரலாற்று சின்னங்கள் இங்கு கிடைத்துள்ளன. மேலும் ஆய்வு செய்தால் கொங்கு மண்டலத்தில் வரலாற்று தொண்மையை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அறிவிப்போடு இல்லாமல், விரைவாக பணியை துவக்க வேண்டும்.