கரூர், கன்னியாகுமரியில் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி? ரகசிய மையம் செயல்பட்டது அம்பலம்
கரூர், கன்னியாகுமரியில் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி? ரகசிய மையம் செயல்பட்டது அம்பலம்
UPDATED : மே 29, 2024 05:53 AM
ADDED : மே 29, 2024 12:35 AM

சென்னை: பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்த வழக்கில் கைதான நபர்கள், கரூர் மற்றும் கன்னியாகுமரியிலும் மையங்கள் அமைத்து, ரகசிய வகுப்புகள் நடத்தியது தெரிய வந்துள்ளது.
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன் என்பவர், மத்திய குற்றப் பிரிவு 'சைபர் கிரைம்' போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட, ஐந்து பேரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலை கவுரவ விரிவுரையாளர் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரான ஹமீது உசேன், தந்தை மற்றும் சகோதரருடன் சேர்ந்து, ராயப்பேட்டையில், 'மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்' என்ற அமைப்பை துவங்கி, பயங்கரவாத செயலுக்கான பயிற்சி வகுப்புகளை எடுத்துள்ளார். இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: கைதான நபர்களின் வங்கி கணக்கு, சொத்து விபரம், தொடர்பில் இருந்த நபர்கள், மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தொடர் விசாரணையில், ஹமீது உசேன், கரூர் மற்றும் கன்னியாகுமரியிலும் மையம் அமைத்து, பயங்கரவாத கொள்கை மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பு, வெடிகுண்டு தயாரிப்பு குறித்து ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்தியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரிக்க, ஹமீது உசேன், அவரது தந்தை, சகோதரர் ஆகியோரை காவலில் எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.