தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ குடியுரிமை திருத்த சட்டத்தால் பா.ஜ., தெம்பு!

குடியுரிமை திருத்த சட்டத்தால் பா.ஜ., தெம்பு!

குடியுரிமை திருத்த சட்டத்தால் பா.ஜ., தெம்பு!


UPDATED : மார் 27, 2024 05:51 AM

ADDED : மார் 27, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2024 05:51 AM ADDED : மார் 27, 2024 01:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்ற எந்த மாநிலங்களையும் விட, வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேசப்படுகிறது. ஆனால், இதனால் பெரிய பாதிப்பு வராது என, பா.ஜ., தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில், மொத்தம், 25 தொகுதிகள் உள்ளன. அதில், 14 தொகுதிகள் அசாமில் உள்ளன. கடந்த தேர்தலில், பா.ஜ., இங்கு ஒன்பது தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் மூன்றில் வென்றது.

லோக்சபா தேர்தல் இங்கு மூன்று கட்டங்களாக நடக்க உள்ளது. இந்நிலையில், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, துன்புறுத்தலுக்கு ஆளாகி, நம் நாட்டில் தஞ்சமடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் போன்றோருக்கு இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

எதிர்ப்பு


ஆனால், முஸ்லிம்கள் விடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. அந்த நாடுகளில் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

அதனால்தான் அந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்பு தரப்படவில்லை என, மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த சட்டம், குடியுரிமை வழங்குவதற்கு தானேயன்றி, பறிப்பதற்கல்ல என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், அசாமில் இந்தப் பிரச்னை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக பேசப்படுகிறது.

அங்குள்ள காங்கிரஸ், அசோம் ஜாதிய பரிஷத், ராய்ஜோர் தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மிகவும் செல்வாக்குள்ள அனைத்து அசாம் மாணவர் சங்கமும் எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், இந்த பிரசாரங்கள் எடுபடாது என, பா.ஜ., நம்பிக்கையுடன் கூறுகிறது. இந்த சட்டத்தால், வங்கதேசத்தில் இருந்து வந்த பெங்காலி மொழி பேசும் ஹிந்துக்களுக்கு குடியுரிமை கிடைக்க உள்ளதால், தங்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்றும் பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அசாமின் ஒவ்வொரு தெருவையும் பற்றியும் நன்கு அறிந்தவரான, பா.ஜ., மூத்த தலைவரும், முதல்வருமான, ஹிமந்த பிஸ்வ சர்மா, எதிர்ப்பு பிரசாரங்களை புறந்தள்ளினார்.

நம்பிக்கை


'என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய விண்ணப்பித்த, 3.4 கோடி பேர்களில், 19 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

'அதில், மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் மட்டுமே, தற்போது குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பர். இது பெரிய எண்ணிக்கை அல்ல.

'மேலும், இது நாடு முழுதுக்குமான சட்டம். அசாமை குறிவைத்து அமல்படுத்தவில்லை என்பதை அசாம் மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் பிரசாரம் பிசுபிசுத்துவிடும்' என, ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், தற்போது மத்திய அமைச்சராக உள்ள சர்பானந்த சோனவால், திப்ருகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

''சி.ஏ.ஏ.,வால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை, அசாம் மக்கள் நன்கு புரிந்துள்ளனர். அதனால், இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 14 தொகுதிகளில், 12ல் பா.ஜ.,வுக்கு வெற்றி உறுதி,'' என, அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us