ADDED : ஆக 02, 2024 02:35 AM

“ரயில் நிலையங்களுக்குச் சென்று டிக்கெட் எடுக்க முடியவில்லை. அங்கேயும் ஹிந்தியை திணித்து விட்டது மத்திய அரசு. இப்போது சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது,'' என, தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி, மத்திய அரசை விமர்சித்து பேசியுள்ளார்.
லோக்சபாவில் நேற்று, பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்விக்காக, இந்த ஆண்டு 2.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அருகில் உள்ள பூடானில், 8 சதவீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், கல்விக்காக ஏராளமாக செய்வது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
கல்விக்காக அதிக நிதியை மாநில அரசுதான் தருகிறது. அதேநேரம் ஜி.எஸ்.டி.,யாக வரி வசூலிக்கும் மத்திய அரசு, மாநில அரசுக்கு தர வேண்டிய எதையும் தர மறுக்கிறது.
நியாயமற்றவர்கள்
மணிமேகலையின் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டு, மாநிலங்களுக்கு பிச்சை பாத்தித்தை கையில் கொடுத்துள்ளது மத்திய அரசு.
புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், தமிழகத்துக்கு தர வேண்டிய 500 கோடி ரூபாய் கல்வி நிதியை தர மறுத்துள்ளனர்.
குஜராத்தில் முதல்வராக இருந்த காலகட்டங்களில், மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் முதல் மனிதராக இருந்த பிரதமர் மோடியே, இன்று மாநில உரிமைகளைப் பறிக்கும் மனிதராக மாறியுள்ளார்.
மொழிக் கொள்கையை வைத்து, தி.மு.க., நாடகம் ஆடுவதாக கூறி, விமர்சிக்கின்றனர். மொழி போராட்டத்திற்காக, உயிரை விட்டவர்கள் திராவிட இயக்கத்தவர்.
தமிழகத்தில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 15ல் தான் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. மொழிக் கொள்கையில் நியாயம் அற்றவர்களாக பா.ஜ.,வினர் உள்ளனர்.
உன் ஜாதி என்ன?
ரயில் நிலையங்களுக்குச் சென்று டிக்கெட் எடுக்க முடியவில்லை. அங்கேயும் ஹிந்தியை திணித்து விட்டது மத்திய அரசு. இப்போது சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த கால கட்டத்தில் தான், மதிப்புமிக்க பார்லிமென்டிலேயே, ஒரு எம்.பி.,யைப் பார்த்து இன்னொரு எம்.பி., உன் ஜாதி என்ன? என்று கேட்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதில் கூடுதல் வேதனை, குறிப்பிட்ட அந்த எம்.பி.,யின் பேச்சை, பிரதமரும் சேர்ந்து ஆதரிப்பது தான்.
இவ்வாறு கனிமொழி பேசினார்
- நமது டில்லி நிருபர் -.