சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு?
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு?
UPDATED : ஏப் 27, 2024 05:16 AM
ADDED : ஏப் 27, 2024 01:15 AM

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ், நாடு முழுதும் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இங்கு ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இருப்பினும், இந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான கோரிக்கை கல்வி ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான திட்டங்களை தயாரிக்க சி.பி.எஸ்.இ.,க்கு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டு கல்வி அமைச்சகம் அறிவித்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி, மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கும், சிறந்த மதிப்பெண்ணைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் போதுமான நேரமும், வாய்ப்பும் இருப்பதை உறுதி செய்ய, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த யோசனையை அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

