தேர்தல் முடிவு தெரிந்த பின் 6 அமைச்சர்கள் மாற்றம்?
தேர்தல் முடிவு தெரிந்த பின் 6 அமைச்சர்கள் மாற்றம்?
ADDED : ஏப் 28, 2024 01:24 AM

ஜூன் 4க்கு பின், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற தகவல், கோட்டை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., - மா.செ.,க்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தன் பரிந்துரையில், வேட்பாளர்களாக நியமிக்கப்படாதவர்கள், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் வேலை பார்க்காதவர்கள்; உள்ளடி வேலை பார்த்தவர்கள் பட்டியல் முதல்வர் கையில் உள்ளது.
வேலை செய்யாதவர்கள் பட்டியலில், மா.செ.,க்களோடு, அமைச்சர்கள் சிலரும் இருப்பதாக தெரிய வந்திருப்பதால், அவர்களை பதவி நீக்கம் செய்ய முதல்வர் முடிவு செய்திருக்கிறார்.
மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட ஆறு பேரை நீக்கி, அவர்களிடம் கட்சி பணிகளை ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளார் என, அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. அவர்கள் மேலும் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், சரியாக இரண்டு ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் வருகிறது. அதனால், இப்போதிலிருந்தே தயாராக வேண்டும் என, முதல்வர் குடும்பத்தினர் விரும்புகின்றனர். அதற்கேற்ப, கட்சி கட்டமைப்பில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்த வலியுறுத்தி வருகின்றனர்.
மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட ஆறு பேரை, முழு நேரம் அரசியல் வேலை பார்ப்பதற்கு அனுப்பலாம் என, யோசனை சொல்லப்பட்டுள்ளது.
கட்சியின் பல்வேறு நிலைகளில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து, கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் வேலையை, அவர்களிடம் கொடுக்கலாம்; அவர்களுக்கு பதிலாக இளைஞர்களை நியமித்தால், கட்சி புத்துணர்ச்சி பெறும் என்று முதல்வர் குடும்பத்தினர் நம்புகின்றனர்.
ஆனால், நெருக்கடியான காலகட்டங்களில், அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் அவசியம்; ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்த அவர்களின் ஆலோசனை தேவை என்று, அரசியல் ஆலோசகர்கள் தரப்பில் முதல்வருக்கு சொல்லப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

