கலைக்கப்பட்ட வீட்டுவசதி சங்கங்களின் ரூ.1,000 கோடி சொத்துக்களை விற்பதில் சிக்கல்
கலைக்கப்பட்ட வீட்டுவசதி சங்கங்களின் ரூ.1,000 கோடி சொத்துக்களை விற்பதில் சிக்கல்
ADDED : செப் 10, 2024 02:07 AM

சென்னை: கலைக்கப்பட்ட வீட்டுவசதி சங்கங்கள் பெயரில் இருந்த, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டு ஏலம் விடும் பணிகளை, எம்.பி., - எம்.எல்.,ஏ.,க்கள் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், சலுகை விலையில் வீட்டு மனைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 1,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் துவங்கப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகளில் இந்த சங்கங்களின் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்பட்டது. மோசமான நிதி நிர்வாகத்தால் முடங்கிய நிலையில் இருந்த வீட்டுவசதி சங்கங்களை சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுத்தது.
மிக மோசமான நிலையில் இருந்த 200க்கும் மேற்பட்ட சங்கங்கள், அ.தி.மு.க., ஆட்சியில் கலைக்கப்பட்டன.
கலைக்கப்பட்ட சங்கங்கள் பெயரில், அந்தந்த பகுதிகளில் அசையா சொத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு சங்கத்துக்கும் கலைத்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்கள், இந்த சொத்துக்களை முறையாக ஏலம் விட்டு விற்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
பெரும்பாலான சங்கங்களின் அதிகாரிகள், இதற்கான பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. அதனால், வீட்டுவசதி சங்கங்களின் சொத்துக்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆதரவுடன் ஆக்கிரமிக்கப் பட்டன.
இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிர்வாக நடவடிக்கை என்ற அடிப்படையில், 200க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலைக்கப்பட்டன. இந்த சங்கங்களின் சொத்துக்கள் மதிப்பு, 1,000 கோடி ரூபாயாகும். சொத்துக்களை ஏலம் வாயிலாக விற்பனை செய்தால், அதனால் கிடைக்கும் நிதியை, இத்துறை மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சங்கங்களின் சொத்துக்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. ஏல அறிவிப்பை வெளியிட்டால், துறை மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து, அவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
இதனால், கலைக்கப்பட்ட வீட்டுவசதி சங்கங்களின், 1,000 கோடி ரூபாய் சொத்துக்கள் மொத்தமாக அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.