sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முழு மதுவிலக்கு நிறைவேற முடியாத கனவு!

/

முழு மதுவிலக்கு நிறைவேற முடியாத கனவு!

முழு மதுவிலக்கு நிறைவேற முடியாத கனவு!

முழு மதுவிலக்கு நிறைவேற முடியாத கனவு!


UPDATED : ஜூன் 30, 2024 08:36 AM

ADDED : ஜூன் 30, 2024 01:13 AM

Google News

UPDATED : ஜூன் 30, 2024 08:36 AM ADDED : ஜூன் 30, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் டாஸ்மாக் கடைகளின் முன் ஆர்ப்பாட்டம் செய்து, அதன் வாயிலாக மது விலக்கு கொள்கையை மீண்டும் அமல்படுத்த முடியும் என்று நினைக்கின்றனர்; அது அவ்வளவு சுலபமல்ல.

மூதறிஞர் ராஜாஜி, 1937-ல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது, சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதன்முதலாக மதுவிலக்கை அமல்படுத்த, சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார். அதன் வாயிலாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரி செய்ய, விற்பனை வரியைக் கொண்டு வந்தார்; விற்பனை வரி, இன்றளவிலும் அமல்படுத்தப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் முதல்வரானதும், அன்றைய மெட்ராஸ் ராஜதானி முழுமைக்குமாக அதை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தினார். கடந்த 1971 வரை இந்தக் கொள்கை அமலில் இருந்தது.

அதன்பின், தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சியினர், அவ்வப்போது இந்தக் கொள்கையை மாற்றி, அதற்கான காரணங்களையும் சொல்லி வந்தனர்.

'கறை படிந்த பணம்'


குறிப்பாக, 'மது விலக்கு கொள்கையைத் தளர்த்த வேண்டாம்' என்று மூதறிஞர் ராஜாஜி மன்றாடியும், மூடிய மது விற்பனை கடைகளை, 1971-ல் அன்றைய அரசு திறந்தது. அதன் வாயிலாக அரசுக்கு கிடைத்த பணம் தான் முக்கியமாகக் கருதப்பட்டது. அந்தப் பணத்தை ராஜாஜி, 'கறை படிந்த பணம்' என்று கூறினார்.அதே அரசு, சில ஆண்டுகளில் மீண்டும் மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்பது வரலாறு.

பல்வேறு நிறுவனங்கள் செய்த ஆய்வின் முடிவுகள், பூரண மது விலக்குக்கு எதிராக இருக்கின்றன.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பூரண மது விலக்கு, தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் மது விலக்கு, 1920 முதல் 1933 வரை, 13 ஆண்டுகள் அமலில் இருந்தது.

இதனால் அங்கு ஊழல் மலிந்து, திருட்டுச் சந்தையில் மது விற்கும் மாபியா கூட்டங்கள் உருவானதால் குற்றங்கள் பெருகி, உரிமம் இல்லாத துப்பாக்கிகள், எங்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது; தாதாக்களின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது.

பின்னாளில் அமெரிக்க அதிபரான ஜான் கென்னடியின் தந்தையான ஜோசப் கென்னடி கோடீஸ்வரரானது, திருட்டுச் சந்தையில் மது விற்றதால் தான் என்பது, அதிர்ச்சி தரும் உண்மை என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் இந்தக் காலகட்டத்தில் உருவான பெரிய தாதா அல்கபோன், தனி ராஜ்யமே நடத்திக் கொண்டிருந்தார்.

அவர் இறந்தபோது, அவரது சடலத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில், சவ ஊர்வலத்தில் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோருடன், அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர்களும் பங்கேற்றனர் என்று சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம், அந்த தாதா எந்த அளவுக்கு செல்வாக்குடன் வாழ்ந்தார்; அந்த அதிகாரிகளும், நீதிபதிகளும் அந்த தாதாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மது பழக்கத்துக்கு அடிமை


இந்தியாவைப் பொறுத்தவரை, மது விலக்குக் கொள்கையைப் பரிசீலித்து, அது பற்றிய பரிந்துரைகளை முன்வைக்கப் பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு, தேக்சந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.

அந்தக் குழு தன் அறிக்கையில், பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது; அதே சமயம், பூரண மது விலக்கின் விளைவாக ஏற்படும் தீமைகளையும் சுட்டிக் காட்டியது.

பெருமளவில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், அதன் தொடர்பாக ஏற்படும் லஞ்ச ஊழல்கள் ஆகியவற்றையும் கோடிட்டு காட்டியுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தான், மது அருந்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆயினும், அங்கேயும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் நடக்கத்தான் செய்கிறது என்றும், அந்தக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் 40 சதவீத கிராமப்புற இளைஞர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர் என்று தெரிவிக்கிறது.

இதனால், அவர்களின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இதற்கெல்லாம் தீர்வு, பூரண மது விலக்கா என்பது தான் கேள்வி.

கிட்டத்தட்ட, 35 ஆண்டுகள் இந்தியக் காவல் துறையில் பணியாற்றிய அனுபவம், குறிப்பாக மது விலக்கை அமல்படுத்தும் பிரிவில் பணியாற்றிய அனுபவம், இன்னும் சொல்லப்போனால் ஆயத்தீர்வைப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றைப் பின்னணியில் கொண்டு நான் கூற விரும்புவதெல்லாம், பூரண மது விலக்கு அமலில் இருந்தபோது, அதன் விளைவாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்பது ஒரு தொழிலாகத் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது.

இதனால், எங்கும் எதிலும் ஊழல் என்ற நிலை ஏற்பட்டது. மதுவுக்கு அடிமையான பல இளைஞர்கள் குளோரல் ஹைட்ரேட், மீத்தேன் போன்ற விஷப் பொருட்களைக் கள்ளச்சாராயத்தில் கலந்து அருந்தி கொத்துக் கொத்தாக இறந்தனர். இதனால், கிராமப் பொருளாதாரம் சீரழிந்தது.

இது மட்டுமல்ல, கள்ளச்சாராயத்தின் வாயிலாகப் பணபலம் பெற்று புது வகையான தொழிலதிபர்களும் உருவாகினர். அமெரிக்காவில் உருவான அல்கபோன் போன்று, இந்தச் சாராய அதிபர்களின் செல்வாக்கு, நாணயமற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை வியாபித்திருந்தது.

அந்தக் காலகட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள், 1 சதவீதம் தான் வெற்றி பெற்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மது விலக்கை, கொள்கையாக்குவது மட்டும் அல்ல; அதற்கு ஏற்றார் போலச் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.

மது வகைகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்ற நிலையை உருவாக்க வேண்டும். முதலில் டாஸ்மாக் கடைகளையும், தனியார் கடைகளையும் மூடுவது; பொது இடங்களில் மது அருந்துவதைக் கடுமையான சட்டத்தின் வாயிலாக தடுப்பது; மது அருந்த அதிகமான பர்மிட் கட்டணம் விதித்து, மது அருந்துவதைக் குறைப்பது.

பெரிய அளவில் நட்சத்திர விடுதிகளில் மது அருந்த அனுமதி வழங்கினால் அதற்கு அதிகமான கேளிக்கை வரி ஆயத்தீர்வை விதித்து, அங்கு வந்து மது அருந்தும் வாடிக்கையாளர்களிடம், அதிக அளவில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் திரும்பத் திரும்ப இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை, பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, அவர்கள் ஓராண்டாவது சிறை தண்டனை அனுபவிக்க சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, காவல் துறை கள்ளச்சாராய லாபியின் கைக்கூலியாக மாறிவிடாமல் இருக்க, நேர்மையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழு அதிகாரமும், ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கூறிய நடவடிக்கைகளை எடுத்தால் நாம் பெருமளவில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் மது அருந்துவோரின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அதைவிடுத்து ஏதோ மந்திரக்கோலை அசைத்து, மதுக் கடைகளை மூடலாம் என்று நினைத்து ஆர்ப்பாட்டம் செய்வோர், இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

உடனடியாக பூரண மது விலக்கு என்பது சாத்தியமற்றது.

ஏறத்தாழ அரை நுாற்றாண்டு காலம் மதுவை ஆறாக ஓடவிட்டு, உடனடியாக, மது அருந்துவோரை மது அருந்தக் கூடாது என்று சொன்னால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாகவே இருக்கும்.

பூரண மது விலக்கு என்று சொல்லி, மக்கள் கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மடிவதை, நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மது அருந்துவோர் மடியட்டும் என்று, மதுவின் மீதான கோபத்தாலும், சமுதாயத்தின் மீதான அக்கறையாலும் சொல்லலாமே தவிர, கண்முன்னால் மக்கள் மரணமடைவதைப் பார்த்துக் கொண்டா இருக்க முடியும்?

நம் கொள்கையை பூரண மது விலக்கு என்ற நிலையிலிருந்து மாற்றி, கட்டுப்படுத்தப்பட்ட வரம்புக்கு உட்பட்ட ஒரு கொள்கையாக அமைக்க வேண்டும்.

வெ.வைகுந்த்

தமிழக முன்னாள் டி.ஜி.பி.,










      Dinamalar
      Follow us