ஓட்டு போடுவதை தடுக்க புது 'ரூட்' பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு
ஓட்டு போடுவதை தடுக்க புது 'ரூட்' பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு
UPDATED : ஏப் 13, 2024 04:12 AM
ADDED : ஏப் 13, 2024 02:12 AM

தேர்தலில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பொருட்களை அரசியல் கட்சிகள் அள்ளி விடுவது வழக்கம். ஆனால், தெற்கு கோவாவில் வாக்காளர்கள் ஓட்டு போடாமல் இருக்க நுாதன வழியை பா.ஜ., பின்பற்றி உள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிஉள்ளது.
முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சியில் உள்ள கோவாவில், மே 7ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
தெற்கு கோவா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விரியாடோ பெர்னாண்டஸ் மற்றும் பா.ஜ., சார்பில் பல்லவி டெம்போ போட்டியிடுகின்றனர்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஆதிக்கம் உள்ள தெற்கு கோவாவில் ஓட்டுகளை கவர, பா.ஜ., தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
ஒருபுறம் ஓட்டுகளை பெற பிரசாரம் செய்தாலும், மறுபுறம் ஓட்டுகளை முடக்கவும் சதி செய்வதாக காங்., குற்றம்சாட்டி உள்ளது.
கோவாவின் வாஸ்கோ ரயில் நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு வாரம் ஒரு ரயில் செல்கிறது.
திங்கள் தோறும் செல்லும் இந்த ரயிலில், வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க கிறிஸ்துவர்கள் திரளாக செல்வது வழக்கம்.
வாஸ்கோவில் இருந்து மே 6ல் புறப்படும் இந்த ரயிலில், தெற்கு கோவாவை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு பா.ஜ., டிக்கெட், 'ஸ்பான்சர்' செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கு அடுத்த நாளான மே 7ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
அன்றைய தினம் அவர்கள் ஓட்டளிக்க வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மே 6 புறப்படும் ரயிலில் 800 பேர் பயணிப்பதாக தெரிகிறது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் மூன்று மாதங்களுக்கு முன்பே, இந்த தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், காங்., குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்றும் பா.ஜ., தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த பயண செலவு, தங்கும் விடுதி உள்ளிட்ட செலவுகளை பா.ஜ., ஏற்றுள்ளதாக காங்., தலைவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -

