ADDED : மார் 24, 2024 12:25 AM

'காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பா.ஜ.,வில் இணையலாம். அவர்கள் வெற்றி பெற்றாலும், பா.ஜ.,வில் தான் இணைவர்' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அவர் மீது, தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள 14 லோக்சபா தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
தேர்தல் நடத்தை விதிகள் மாநிலத்தில் அமலில் உள்ளது. இந்நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியிருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
இது குறித்து அசாம் காங்கிரஸ் தலைவர் பூபென் குமார் போரா, தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பியுள்ள புகார்:
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர், 'காங்கிரஸ் வேட்பாளர்கள் விரும்பினால் பா.ஜ.,வில் இணையலாம். காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் பா.ஜ.,வில் தான் இணைவர். எனவே அவர்களுக்கு ஓட்டுபோடுவதில் எந்த அர்த்தமுமில்லை' என கூறினார்.
முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் இந்த பேச்சு, ஓட்டளிப்பவர்களிடம் தவறான செய்தியை பரப்புகிறது.
எந்த ஆதாரமும் இல்லாத பொய்யான தகவலை பேசி, ஓட்டளிக்கும் மக்களை தவறாக வழி நடத்தி தேர்தல் நடத்தை விதியை மீறியுள்ளார்.
அதே போல் காங்கிரஸ் வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வெளிப்படையான, சுதந்திரமான தேர்தலை கேள்விக்குள்ளாக்கி உள்ளார். அவர் மீது தலைமை தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்
- - - நமது சிறப்பு நிருபர் -.

