'இந்திய - இலங்கை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தணும்'
'இந்திய - இலங்கை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தணும்'
ADDED : ஆக 07, 2024 05:06 AM

''மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு, இந்தியா - இலங்கை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும்இரு நாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு போன்றவை, நேரில் சந்தித்து ஆலோசிப்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று, கனிமொழி கூறினார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து, நேற்று டில்லியில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி.,க்கள் கனிமொழி மற்றும் நவாஸ்கனி ஆகியோர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினர்.
பின் கனிமொழி அளித்த பேட்டி: இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றனர்.சமீபத்தில் கூட ராமேஸ்வரம் மீனவர்கள், கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு, சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியா மற்றும்இலங்கை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு கூடி பேச வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன், இதுபோன்ற ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
தற்போது எழுந்துள்ள இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, விரைவில் இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். இரு தரப்பு அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை மட்டுமல்லாது, இருநாட்டு மீனவ சங்க பிரதிநிதிகளும் சந்தித்து, தங்களுடைய பிரச்சனைகளை, நேருக்கு நேர் பேசி, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
விரைவில் ஏற்பாடு செய்வதாக அமைச்சரும் வாக்குறுதி கொடுத்து உள்ளார். நாங்கள் மத்திய அமைச்சரை சந்திக்கப் போகும் விபரம் அறிந்து கொண்டு, முன்கூட்டியே பா.ஜ., தலைவர்கள் இதே மாதிரியான சந்திப்பை நிகழ்த்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -