மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டர் நேருவை சந்தித்ததால் சர்ச்சை
மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டர் நேருவை சந்தித்ததால் சர்ச்சை
ADDED : பிப் 26, 2025 05:15 AM

திருச்சி : அண்ணாமலை பல்கலையின் போலி கல்விச் சான்றிதழ்கள் அளித்தது மற்றும் ஆயுஷ் டாக்டர் போலி சான்றிதழ் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட திருச்சி போலி டாக்டர், அமைச்சர் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன். இவரது மனைவி தமிழரசி. இருவரும் சித்த மருத்துவர்கள் எனக் கூறி வந்தனர்; அ.தி.மு.க.,விலும் இணைந்து செயல்பட்டனர். தற்போது தி.மு.க.,வில் உள்ளனர். சுப்பையா பாண்டியன், சித்த மருத்துவ சங்கம் துவக்கி, அதன் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில், அண்ணாமலை பல்கலை பட்டப்படிப்புக்கு, போலி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வெளிமாநில மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெயரில், போலி மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்கள் அளித்த வழக்கில், கடலுார் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால், ஆறு மாதங்களுக்கு முன் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
அண்மையில், இவர் ஜாமினில் வெளி வந்தார். சில நாட்களுக்கு முன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை, தன் மனைவி தமிழரசியுடன் சென்று சந்தித்தார். அப்போது, அமைச்சர் நேருவுக்கு பட்டுத் துண்டு அணிவித்து, சுப்பையா பாண்டியன் ஆசி பெற்றார்.
இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்கள் வெளிவந்தன. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட போலி டாக்டரை அமைச்சர் சந்தித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.