எம்.ஜி.ஆர்., - ஜெ., பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க., கொந்தளிப்பு
எம்.ஜி.ஆர்., - ஜெ., பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க., கொந்தளிப்பு
ADDED : ஆக 12, 2024 05:14 AM

சென்னை : அ.தி.மு.க., தலைவர்களான எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா குறித்து, அமைச்சர் அன்பரசன் தரக்குறைவாக பேசியதற்கு, அ.தி.மு.க., - அ.ம.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:
தமிழகத்தில் பஸ்கள் ஓட்டை உடைசலாக உள்ளன. தமிழக அரசு கார் பந்தயத்திற்கு செலவிடும் பணத்தை, பஸ்களை சீரமைக்க செலவழிக்கலாம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் அன்பரசனுக்கு முதலில் தகுதி வேண்டும். தி.மு.க., ஆட்சியில் அடாவடித்தனம், அராஜகம், கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. அதுவே அமைச்சருக்கான தகுதியாக இருக்கிறது. மக்களால் போற்றப்படும் தலைவியை சிறுமைப்படுத்தும் விதமாக பேசி உள்ளார். இதுபோல் பேசினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி:
மற்ற கட்சியினர் பெண்கள் மீது அவதுாறு பேசினால் பொங்கியெழும் தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கனிமொழி, இதற்கு என்ன சொல்லப் போகிறார்?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்:
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி குறித்து, மறைந்த நாஞ்சில் மனோகரன் எழுதிய, 'கருவின் குற்றம்' என்ற கவிதை குறித்தும்; கவிஞர் கண்ணதாசன் எழுதிய, 'வனவாசம்' குறித்தும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால், அன்பரசன் போன்ற தி.மு.க.,வினரில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

