sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தனியார் பள்ளிகளில் ஹிந்தி பாட சர்ச்சை

/

தனியார் பள்ளிகளில் ஹிந்தி பாட சர்ச்சை

தனியார் பள்ளிகளில் ஹிந்தி பாட சர்ச்சை

தனியார் பள்ளிகளில் ஹிந்தி பாட சர்ச்சை

8


ADDED : மார் 05, 2025 06:43 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:43 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால், அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக்கொள்கை தானே தவிர, தி.மு.க.,வினர் காரணமல்ல' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, தமிழக பா.ஜ., தரப்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

பட்டியல் வெளியிடுவது நோக்கமல்ல


கட்சியினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி, என் பிறந்த நாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், தமிழிசை வாழ்த்தி, தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய 'பண்பையும்' காட்டியிருக்கிறார்.

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில், 'ஹிந்தி' இடம்பெறவில்லை. அதுதான் தமிழகத்தில் நிலவும் உணர்வின் வெளிப்பாடு. தமிழ்,- ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப்பின், தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். எனக்கு தெலுங்கு தெரியாது; நான் படித்ததும் இல்லை.

தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த தமிழிசை, தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை. தேவைப்படுவோர் அதை புரிந்து பயன்படுத்த முடியும்.

தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும், ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என, விமர்சனம் செய்கின்றனர். பரம்பரை பரம்பரையாகவே கல்வி வியாபாரம் செய்யும் பா.ஜ., குடும்பத்தினர் பட்டியலை வெளியிட்டு, பதிலுக்குப் பதில் பேசுவது நம் நோக்கமல்ல.

உரிய அனுமதியுடன் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும், எந்தவொரு கட்சியையும் சாராதவர்களும் பள்ளிகளை நடத்த முடியும். தி.மு.க.,வினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துவோரும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துவோரும் உரிய அனுமதியுடன் தான் நடத்துகின்றனர்.

தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால், அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக் கொள்கை தானே தவிர, தி.மு.க.,வினரோ, வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. ஹிந்தி மொழி என்பது கட்டாயமுமில்லை. அந்த மொழியில் தேர்வு நடத்தப்படுவதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காந்தி கூறியதை தி.மு.க., ஏற்குமா?


நாராயணன் திருப்பதி பதில் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில், தி.மு.க.,வினர் கல்வி வியாபாரம் செய்வதை ஒப்புக் கொண்டுள்ளார். மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெறாமல், மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவக்க அனுமதி தராது. இதை முதல்வர் மறுப்பதில் இருந்தே, கல்வி வியாபாரத்தில், தி.மு.க.,வினர் கொடிகட்டி பறக்கின்றனர் என்பதை உணர முடிகிறது.

பா.ஜ.,வினர் நடத்தும் பள்ளிகள் குறித்து பட்டியலை, தாராளமாக முதல்வர் வெளியிடட்டும்; கவலை இல்லை. எங்கள் இயக்கத்தை சார்ந்த, ஜெய்கோபால் கரோடியா ஆதரவுடன் செயல்படும், அரசு பள்ளிகள் பட்டியலையும் வெளியிடட்டும்.

டில்லி, ஹரியானாவுக்கு அடுத்து, தமிழகத்தில் தான் அதிக சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் கல்விக் கொள்கையை, தி.மு.க.,வினரும், முதல்வரின் குடும்பத்தினரும் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து, மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற, ஒரு நொடி போதுமே... அதற்கு முதல்வர் உத்தரவிடுவாரா?

மாநில பாட திட்டத்தில் செயல்படும், தனியார் பள்ளிகள் எவ்வளவு, மற்ற பாடத்திட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் எவ்வளவு என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? ஹிந்தியை நாட்டில் உள்ள அனைவரும், தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என காந்தி கூறினார். அதை தி.மு.க., ஏற்குமா?

எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் சமூக நீதி. ஆனால், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் மூன்று மொழி கற்கின்றனர். அதே வேளையில், அரசு பள்ளி மாணவர்கள் மட்டும், இருமொழி மட்டுமே கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது, சமூக அநீதியல்லவா?

தேசிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு செயல்படுத்துவதன் வழியே, இந்தியாவின் அனைத்து மாநில பள்ளிகளிலும், தமிழ் கற்பிக்கக் கூடிய வாய்ப்பை, முதல்வர் தட்டிப் பறிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us