கிளம்பியது 'கிரீம் பன்'; பெரும் முயற்சி வீண்! மாற்றத்தை எதிர்பார்த்த கொங்கு தொழில்துறையினர் ஏமாற்றம்
கிளம்பியது 'கிரீம் பன்'; பெரும் முயற்சி வீண்! மாற்றத்தை எதிர்பார்த்த கொங்கு தொழில்துறையினர் ஏமாற்றம்
ADDED : செப் 15, 2024 03:19 AM

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழில்துறையினருக்கு, தொழில் நிமித்தமாக மத்திய - மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. இவ்விரு அரசுகளின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை தொழில்துறை பிரதிநிதிகள் அவ்வப்போது சந்தித்து முறையிட்டு வருவது வழக்கம்.
நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, தொழில்துறைக்கு மத்திய அரசு செய்து வரும் திட்டங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவித்த சலுகைகளை விளக்கும் வகையில் தொழில்துறை சந்திப்பு கூட்டம் கோவையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. வழக்கமான சந்திப்பாக இல்லாமல் இம்முறை நடத்திய கூட்டம் தொழில்துறையினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
ஏனெனில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, மத்திய அரசு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் வருகை தந்தனர். யாருமே எதிர்பார்க்காத வகையில், டில்லியில் இருந்து எம்.எஸ்.எம்.இ., அமைச்சக கூடுதல் மேம்பாட்டு கமிஷனர், ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி முதன்மை தலைமை கமிஷனர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், வங்கி மற்றும் காப்பீடு துறை அதிகாரிகள், டெக்ஸ்டைல் மற்றும் லெதர் போர்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் வந்திருந்தனர்.
அதாவது, முக்கியமான எட்டு துறைகள் மற்றும் இரண்டு வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் என, 50க்கும் மேற்பட்டோர் முகாமிட்டனர். இவர்களை, தொழில்துறையினர் சந்தித்து துறை சார்ந்த கோரிக்கைகளை விரிவாக விளக்கினர். அவற்றை தொகுத்த அதிகாரிகள், நிதியமைச்சரிடம் தெரிவித்தனர்; இந்த ஆலோசனை ஒரு மணி நேரம் நடந்தது.
இதன் பிறகே, தொழில்துறையினருடனான சந்திப்பு கூட்டம் நடந்தது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளை ஒரு சேர சந்திப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல; அத்தகைய அதிசய நிகழ்வு கோவையில் நடந்திருக்கிறது. இதுவே முதல் முறை.
அதிலும், 61 விதமான கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், கூட்டத்திலேயே நிதியமைச்சர் வாக்குறுதி கூறியிருப்பதும், தொழில்துறையினரை மகிழ்ச்சி அடைய வைத்தது. அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை என்பதே துரதிர்ஷ்டம்.
அக்கூட்டத்தில், ஹோட்டல் உரிமையாளர் பேசியதில், 'கிரீம் பன்னுக்கு ஜி.எஸ்.டி.,' என்கிற ஒரு பகுதியை மட்டும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாக்கப்பட்டது.
இது, தொழில்சார்ந்தவர்களுக்கு தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது; உடனே, ஹோட்டல் நிர்வாகியே நேரில் சென்று நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்பு கோரினார்; அந்த வீடியோவும் 'லீக்'காகி, அரசியல் வட்டாரத்தில் மாற்று திசையை நோக்கி, இவ்விவகாரம் சென்றதால், மேற்கு மண்டல தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
தொழில்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோரிக்கைகள் அனைத்தும் உயரதிகாரிகளின் கவனத்துக்கு நேரடியாக சென்றிருக்கிறது.
தீர்வை நோக்கி, தொழில் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட நகர்வுகளுக்குச் செல்லும் தருணத்தில், அரசியல் கட்சியினரின் தேவையற்ற கருத்து மோதல்களால் அதிர்ச்சி அடைந்திருக்கும் தொழில்துறையினர், இவ்விவகாரத்தை இதோடு நிறுத்திக் கொள்ளவும், தொழில் வளர்ச்சிக்கு கரம் கொடுக்கவும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.