கடைகளில் 'பாதுகாக்கப்படும்' பிரேத உறுப்புகள்: மதுரை அரசு மருத்துவமனையில் 'மார்ச்சுவரி' அவலம்
கடைகளில் 'பாதுகாக்கப்படும்' பிரேத உறுப்புகள்: மதுரை அரசு மருத்துவமனையில் 'மார்ச்சுவரி' அவலம்
ADDED : மே 09, 2024 07:29 AM

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை 'மார்ச்சுவரி'க்கு வரும் உடல்களில் இருந்து முக்கிய உறுப்புகள் எடுத்து பாட்டில்களில் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்படும். தடய அறிவியல் பரிசோதனை மையம், நோயியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டிய பாட்டில்கள் தங்களிடமே ஒப்படைக்கப்படுவதாக போலீசார் புகார் தெரிவிக்கின்றனர்.
விபத்து, கொலை, தற்கொலை நிகழ்வுகளில் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் ஒப்புதல் கடிதத்துடன் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனை 'மார்ச்சுவரி'யில் ஒப்படைக்கப்படும். சில வழக்குகளில் மரணத்தின் தன்மையை கண்டறிய கல்லீரல், கணையம், சிறுகுடல் போன்ற உறுப்புகள் கண்ணாடி பாட்டில்களில் சேகரிக்கப்பட்டு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும். இதை 'விஸ்செரா' பரிசோதனை என்பர். அதேபோல நோயியல் காரணிகளை கண்டறிய உடல் திசுக்களின் மாதிரி, ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவக் கல்லுாரியில் உள்ள நோயியல் துறைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் அனுப்பப்படும்.
உடல் உறுப்பு, திசு மாதிரிகள் எடுக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். அதை சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைத்து போலீசார் ஒப்புதல் சான்று பெற வேண்டும். நோயியல் துறை மதியம் 3:00 மணிக்குள்ளும் தடய அறிவியல் துறை மாலை 4:00 மணிக்குள்ளும் மூடப்பட்டு விடும். பிரேத பரிசோதனை மாலை 4:00 மணிக்கு மேல் முடிந்து அதன் பின் உறுப்புகள் பெறப்பட்டால் உடனடியாக அந்தந்த துறைகளிடம் போலீசார் ஒப்படைக்க முடியாது. இந்த பாட்டில்களை 'மார்ச்சுவரி'யில் ஒப்படைத்து மறுநாள் போலீசார் பெற்றுக் கொள்வர். ஏப்.,30 வரை இந்த நடைமுறை இருந்த நிலையில் ஒரு வாரமாக தாமதமாக பெறும் பாட்டில்களை தங்களிடமே கொடுக்கின்றனர் என்கின்றனர் போலீசார்.
அவர்கள் கூறியதாவது: துறைகளிடம் பாட்டில்களை ஒப்படைக்க முடியாத பட்சத்தில் எங்களையே கொண்டு செல்லுமாறு கூறுகின்றனர். 4 கண்ணாடி பாட்டில்கள், 2 முதல் 6 பிளாஸ்டிக் பாட்டில்களை 'கட்டை பையில்' வைத்து வீட்டுக்கோ, ஸ்டேஷனுக்கோ எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இல்லாதபட்சத்தில் தெரிந்த கடைகளில் கொடுத்துவிட்டு மறுநாள் வாங்கிச்செல்ல வேண்டியுள்ளது. ஒருவேளை பாட்டில் தொலைந்தாலோ, உடைந்தாலோ யார் பொறுப்பு. தவிர இந்த பாட்டில்களுடன் வந்தால் வீட்டிற்குள் எங்களை அனுமதிக்க குடும்பத்தினர் தயங்குகின்றனர். இது எங்களுக்கு தேவையற்ற அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது.
ஓராண்டுக்கு முன் 'மார்ச்சுவரி' வளாகத்தில் போலீசாருக்கென அறை இருந்தது. இதில் கழிப்பறை, குடிநீர் வசதி இருப்பதால் வெளியூரில் இருந்து வரும் போலீசாருக்கு பயனுள்ளதாக இருந்தது. அதையும் பூட்டி விட்டனர். மூடப்பட்ட அறையை திறப்பதோடு மார்ச்சுவரிக்குள் முன்பு போல பாட்டில்களை பாதுகாக்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.