8 மாதங்களில் 47 யானை, 5 புலிகள் இறப்பு விஷம் வைத்து கொலையா என விசாரணை
8 மாதங்களில் 47 யானை, 5 புலிகள் இறப்பு விஷம் வைத்து கொலையா என விசாரணை
ADDED : ஆக 26, 2024 03:39 AM

தமிழகத்தில், இந்தஆண்டு ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில், 47 யானைகள், ஐந்து புலிகள் இறந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவை, விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என, வனத்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
தமிழக வனப்பகுதிகளில் யானைகள், புலிகள் பிரதான உயிரியல் ஆதாரமாக அமைந்துள்ளன. இவற்றின் நடமாட்டம், இனப்பெருக்கம் அடிப்படையில், வனப்பகுதிகளில் சூழலியல் தன்மை கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, யானைகள், புலிகள் பாதுகாப்புக்காக, பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கவலை
தமிழக வனத்துறையின் அதிகாரப்பூர்வமான புள்ளி விபரங்களின்படி, தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை, 3,063 ஆகவும்; புலிகள் எண்ணிக்கை, 306 ஆகவும் உயர்ந்துள்ளது. யானைகள், புலிகள் எண்ணிக்கை உயர்ந்தாலும், இறப்புகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது.
அதாவது, கடந்த எட்டு மாதங்களில்,  நீலகிரி மாவட்டம் முதுமலையில், 16 யானைகள்; கோவை மாவட்டத்தில், 14 யானைகள்; ஈரோடு சத்தியமங்கலத்தில், ஒன்பது யானைகள் உட்பட, 47 யானைகள் இறந்துள்ளன.
இதில், நான்கு யானைகள் மட்டுமே மனிதர்களால் கொல்லப்பட்டன என, வனத்துறை அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
சர்ச்சையானது
கடந்த ஆண்டு நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில், 10 புலிகள் இறந்தது பெரிய அளவில் சர்ச்சையானது.
தேசிய புலிகள் ஆணைய விசாரணைக்கு பின், பெரும்பாலான புலிகள் இயற்கை காரணங்களால் இறந்ததாக வனத்துறை தெரிவித்தது.  இந்த ஆண்டு எட்டு மாதங்களில், ஐந்து புலிகள் இறந்துள்ளன. ஒன்று நெல்லையிலும், நான்கு புலிகள் நீலகிரியிலும் இறந்துள்ளன.
அதில், நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில், இரு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேசிய புலிகள் ஆணைய மேற்பார்வையில், இதற்கான விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
-- நமது நிருபர் -

