ADDED : ஜூலை 13, 2024 11:42 PM

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். பார்லிமென்டிற்கு அருகே டில்லி ராஜாஜி சாலையில் உள்ள அரசு பங்களாவில் தான் இவர் வசிக்கிறார். இந்த பகுதியில் குரங்குகள் அதிகம். இவர் வீட்டில் ஒரு பக்கம் குரங்குகள், இன்னொரு பக்கம் தேனீக்கள்.
பங்களாவில் மிகப் பெரிய தோட்டம் உள்ளது. அங்குள்ள மரம் ஒன்றில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன; பலாப் பழ சைஸில் மிகப் பெரிய தேன் கூடு உள்ளது. தேனீக்கள் அடிக்கடி வீட்டிற்குள் வந்துவிடுகின்றன.
'இண்டியா' கூட்டணியின் கூட்டங்கள் இந்த பங்களாவில் தான் தற்போது நடைபெறுகின்றன. எதிர்க்கட்சி தலைவர்கள் கூடும் அந்த சமயத்திலும், தேனீக்கள் தாக்குதல் நடைபெறுகிறது. 'மருந்து ஸ்பிரே செய்து தேனீக்களை ஒழித்து விடலாம்' என, கார்கேவிற்கு அட்வைஸ் தரப்பட்டது; ஆனால் அவரோ, 'தேனீக்களை கொல்லக்கூடாது' என, மறுத்து விட்டார்.
கூட்டம் நடைபெறும் சமயத்தில் வலை போடப்பட்டு தேனீக்கள் தாக்குதலை தடுத்து வருகின்றனர். மேலும், இதனால் நிருபர்களுக்கும் தொல்லை. எதிர்க்கட்சி கூட்டங்கள் நடைபெறும் போது செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்களையும் தேனீக்கள் விட்டு வைப்பதில்லை; இதனால், எப்போதும் கையில் ஒரு பேப்பரை வைத்து தேனீக்களை ஓட்டுகின்றனர்.