ADDED : ஆக 18, 2024 02:12 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் உள்ள கோல்கட்டா மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டருக்கு ஏற்பட்ட அநீதியால், நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இளம் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வெறித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள், சம்பவம் நடந்த மருத்துவமனையை தாக்கி, சி.பி.ஐ.,க்கு தேவையான ஆதாரங்களை அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
தங்கள் கூட்டணியில் மம்தா இருப்பதால், 'இண்டி' தலைவர்கள் துவக்கத்தில் அமைதியாக இருந்தனர். ஆனால், போராட்டம் பெரிதாகவே, பிரியங்கா, ராகுல் உட்பட பலர் மேற்கு வங்க அரசை கடுமையாக விமர்சித்தனர்; இதனால், மம்தாவிற்கு கோபம் அதிகமாகியது.
ஏற்கனவே இவருக்கும், ராகுலுக்கும் ஆகாது. 'எதிர்க்கட்சி தலைவராக ஆக்கப்பூர்வமாக செயல்படாத ராகுலுக்கு, பிரதமர் பதவி மீது ஆசையா?' என, கோபமாக தன் கட்சி தலைவர்களுடன் பேசும்போது கூறினாராம் மம்தா. இதையடுத்து, தன் கட்சி தலைவர்களுக்கு ஒரு உத்தரவிட்டுள்ளார்.
உடனே லோக்சபாவில் மம்தா கட்சியின் தலைவர் சுதிப் பந்தோபாத்யாயா, சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதினாராம். அதில், 'நாங்கள் இண்டி கூட்டணியில் இல்லை; எங்களுக்கு லோக்சபாவில் தனி இடம் ஒதுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளாராம். இண்டி கூட்டணி முழுதும், ஓர் அணியாகக் கருதி, சபையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியாக இருக்கும்போது, எதிர்க்கட்சி தலைவர் வழிகாட்டுதலின்படி தான், யார் யார் சபையில் பேச வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். இனிமேல், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் லோக்சபாவில் தன்னிச்சையாக செயல்படும்.