ADDED : மார் 09, 2025 02:18 AM

புதுடில்லி: தமிழகத்தைப் போல கர்நாடகாவிலும் தேர்தல் பிரசாரத்தின்போது, நடிகர் - நடிகையரை கட்சிகள் பயன்படுத்துகின்றன. ஆனால், தற்போது சித்தராமையா அரசுக்கும், கன்னட திரைத்துறைக்கும் இடையே லடாய்.
அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களுக்கு நடிகர் - நடிகையர் வர மறுக்கின்றனர். காரணம், 'கட்சிக்கு பணம் கொடுங்கள்' என, நெருக்கடி கொடுப்பதால் அவர்கள் வருவதில்லையாம்.
சமீபத்தில், பெங்களூரில் உலக திரைப்பட விழா நடைபெற்றது. அதில், ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையான நடிகர் - நடிகையர் பங்கேற்கவில்லை. விழாவில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், 'இது உங்கள் விழா; ஆனால் இதில் யாரும் பங்கேற்கவில்லை.
'நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, எங்களை நீங்கள் ஆதரிக்கவில்லை' என பேசியவர், 'அரசின் அனுமதி இல்லாமல், நீங்கள் ஷூட்டிங் நடத்த முடியாது. உங்களை எப்படி, 'டீல்' செய்வது என்பது எங்களுக்கு தெரியும்' என, பெரும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த விழாவில் பங்கேற்க, கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனாவை அழைத்தனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இதனால், கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கும், கன்னட திரைப்படத் துறைக்கும் இடையே தற்போது பெரும் போர் நடந்து வருகிறது.
கட்சி சொத்துக்கள் எங்கே?
காங்கிரஸ் கட்சியில் புதிதாக ஒரு துறை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல இடங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பது, அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா, இந்த இடங்களை எப்படி வியாபார ரீதியில் பயன்படுத்தி கட்சிக்கு நிதியை பெருக்க முடியும் என்ற திட்டங்களுடன், முதன்முறையாக இந்த கமிட்டி துவங்கப்பட்டுள்ளது.
கட்சியின் இணை பொருளாளர் விஜய் இந்தர் சிங்லா தான், இந்த கமிட்டியின் தலைவர். நாடு முழுதும் 2,000 அசையா சொத்துக்கள் கட்சியின் வசம் உள்ளதாம்.
கர்நாடகாவின் ஹூப்ளியில் இப்படி ஒரு சொத்து, காங்கிரசுக்கும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும், இடையே பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம், இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்னையில், காங்கிரசுக்கு சொந்தமான தேனாம்பேட்டை இடத்தை, கமர்ஷியல் ஆக்குவது குறித்தும் இந்த கமிட்டி ஆராய்ந்து வருகிறது.
குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஆந்திரா என, பல மாநிலங்களில் உள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளனவாம். இதன், அசல் ஆவணங்களைப் பெறுவதிலும், பல சிக்கல்கள் என சொல்லப்படுகிறது.
பல தோல்விக்கு ஆளான காங்கிரசில், இப்போது நிதி நிலைமை மோசமாக உள்ளது. எனவே, கட்சிக்கு சொந்தமான இடங்களை, வியாபார ரீதியாக பயன்படுத்தினால், பணமாக கிடைக்கும் என்பதால் இந்த முடிவாம்!