ADDED : செப் 15, 2024 12:42 AM

புதுடில்லி: வரும் நவம்பரில் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, பா.ஜ., -ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா-, அஜித் பவாரின் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா-, சரத் பவாரின் கட்சி ஆகியவை எதிரணியில் உள்ளன. 'மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்குமா?' என, கேள்விகள் எழுந்துள்ளன. அஜித் பவார் கூட்டணியில் சேர்ந்ததால், பா.ஜ.,விற்குள் பலருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில், 'ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது கஷ்டம்' என்கின்றனர்.
பா.ஜ.,வோ ஆட்சியை விட்டு கொடுக்க கூடாது என்பதில் குறியாக உள்ளது; இதற்காக, அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மஹாராஷ்டிரா அரசியல்வாதிகள் தேவேந்திர பட்னவிஸ், நிதின் கட்கரி உட்பல பலருக்கு ரஜினிகாந்த் மிகவும் நெருக்கம்.
இதனால், மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினியை அழைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்; அமித் ஷா இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம். பிரதமர் மோடியின் அனுமதியுடன் தான் இதெல்லாம் நடைபெறுகிறதாம்.
மும்பையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில், ரஜினி தமிழில் பிரசாரம் செய்ய வேண்டும் என பா.ஜ., தலைவர்கள் விரும்புகின்றனர்.
இதைத் தவிர மற்ற இடங்களில் மராட்டியிலும், ஹிந்தியிலும் பிரசாரம் செய்ய வேண்டும்; இது அமித் ஷாவின் ஆசை. இதற்கு ரஜினி ஒத்துக்கொள்வாரா?