தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா?: ஹிந்து முன்னணி தலைவர் கேள்வி
தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா?: ஹிந்து முன்னணி தலைவர் கேள்வி
UPDATED : மே 28, 2024 09:18 AM
ADDED : மே 28, 2024 09:12 AM

சென்னை: தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என ஹிந்து முன்னணி மாநில தலைவர், காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சமீபத்தில் சவுக்கு சங்கரின் தாய் தொடுத்த வழக்கை, உடனடியாக விசாரிக்கக் கூடாது என்று தனக்கு அதிகாரம் மிக்க நபர்கள் தொடர்பு கொண்டதாக ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார். சில வாரங்களுக்கு முன் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி விழாவில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட இலையில், பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்குவது குறித்த வழக்கில், 'இது சமய நம்பிக்கை நிகழ்ச்சி; இதை யாரும் தடுக்க முடியாது. அரசியல் சாசனம் அளித்துள்ள வழிபாட்டு உரிமைக்கு அரசின் அனுமதி கேட்க வேண்டியதில்லை' என, கூறி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், நீதிபதி சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.க.,வினர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.கோர்ட் வளாகத்தில் மிரட்டல் விடுத்தும், உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தும் நீதிபதியை மிரட்டுவது தமிழகத்துக்கு தலைகுனிவு. இத்தகைய போக்கு குறித்து எந்த கட்சியினரும் வாய் திறக்கவில்லை என்பது வேதனையான விஷயம். இத்தகைய செயல்பாட்டை ஹிந்து முன்னணி கண்டிக்கிறது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.