'உங்கள் கண்முன் தானே ஈஷா மையம் கட்டப்பட்டது :விதிமீறல் இருப்பது இப்போது தான் தெரிய வந்ததா?'
'உங்கள் கண்முன் தானே ஈஷா மையம் கட்டப்பட்டது :விதிமீறல் இருப்பது இப்போது தான் தெரிய வந்ததா?'
ADDED : பிப் 15, 2025 03:24 AM

'உங்கள் கண்முன் தான் ஈஷா யோக மையம் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்போது வந்து விதிமீறல் இருப்பதாக ஏன் கூறுகிறீர்கள்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி உள்ளது.
கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி கட்டப்பட்டுள்ள ஈஷா யோகா மையத்தில், கட்டுமானங்களை மேற்கொண்டதில் விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நோட்டீசுக்கு எதிராக ஈஷா யோக மையம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், '637 நாட்களுக்குப் பின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது ஏன்? உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு அதிகாரிகளை யார் தடுத்தது; எதற்காக இவ்வளவு தாமதம். இந்த தாமதமே பல சந்தேகங்களை எழுப்புகிறது' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், 1.25 லட்சம் சதுர மீட்டர் அளவுள்ள நிலத்தில் ஈஷா மையம் அனுமதி இன்றி கட்டடங்களை கட்டி இருப்பதாக வாதங்களை முன் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:
உங்கள் மனுவில், ஈஷா யோகா மையம் கல்வி நிலையம் இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள். எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறீர்கள்.
கல்வி நிறுவனங்களுக்கான வரைமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் செயல்படவில்லை என்றால், நீங்கள் தாராளமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் அதை விடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஒழுங்காக அமைக்கவில்லை என்பது போன்ற காரணங்களை எல்லாம் தெரிவிப்பதை ஏற்க முடியாது.
உங்கள் கண்முன் தானே ஈஷா யோக மையம் கட்டப்பட்டது. அந்த கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்து விட்டன.
இப்போது, அது ஆபத்து விளைவிக்கக் கூடியது என சொல்கிறீர்கள். அதை நாங்கள் எப்படி ஏற்பது? பசுமைப் பகுதி குறைவாக இருக்கிறது அல்லது வேறு ஏதேனும் பிரச்னை என்றால், அதை சரி செய்ய பாருங்கள்.
உங்கள் கண் முன்பாகவே கட்டி எழுப்பப்பட்ட கட்டடத்தை திடீரென நீங்கள் இடிக்கக் கேட்பதால், அதை அனுமதிக்க முடியாது. ஆரம்பத்திலேயே விதிமுறைகள் மீறி இருக்கிறது எனக் கூறாமல், இப்போது வந்து இந்த காரணங்களை நீங்கள் கூறுவது ஏன்?
இவ்வாறு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார்.
இதன்பின், ஈஷா யோகா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'நாட்டிலேயே மிகவும் சிறப்பான யோகா பயிற்சி மையமாக ஈஷா தான் செயல்படுகிறது.
'மொத்த கட்டுமானப் பகுதிகளில், 80 சதவீத இடம் பசுமை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் நீதிபதிகளை ஈஷா மையத்திற்கு அழைத்துச் சென்று காட்டவும் தயாராக இருக்கிறோம்' என்றார்.
மேலும் சிவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், வழக்கின் விசாரணையை அதற்கு பின் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- புதுடில்லி சிறப்பு நிருபர் -