ADDED : மே 26, 2024 02:12 AM

சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பல துறைகளைச் சேர்ந்த செயலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றால் ஒரு முக்கிய திட்டத்தை கொண்டு வர உள்ளாராம். அது தொடர்பாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டம் என்கின்றனர். 70 மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்களுக்கு மருத்துவ உதவி, மருந்து, அறுவை சிகிச்சை என, அனைத்தும் இலவசம். 5 லட்சம் ரூபாய் வரை அறுவை சிகிச்சையும் இலவசம்; இது மோடியின் திட்டம்.
பதவியேற்றவுடன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதும், இந்த திட்டம் தொடர்பாகத்தான் முதல் கையெழுத்து போடுவார் என சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான காப்பீட்டு தொகையை மத்திய அரசே செலுத்தும். சீனியர் சிட்டிசன்கள் மருத்துவ செலவிற்கு திண்டாடும் நிலையில் இந்த திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதம் என்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.
கடந்த 2004 லோக்சபா தேர்தலின் போது, அப்போது ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசும் இப்படித்தான் ஏராளமான கனவுகளோடு இருந்தது. கடைசியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க முடியவில்லை என்பதை மோடி உணர்ந்திருக்க வேண்டும் என்கின்றனர் காங்கிரசார். ஆனால் பா.ஜ.,வினரோ, மீண்டும் மோடிதான் என நம்பிக்கையுடன் உள்ளனர்.