ADDED : ஜூன் 02, 2024 12:45 AM

லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து விட்டது. யார் ஆட்சி அமைக்கின்றனர் என்பது, 4ம் தேதி தெரிந்து விடும். இந்நிலையில், டில்லியில் கட்சி அலுவலகங்களில் பரபரப்பு அதிகமாகி உள்ளது. பெரிய, 'டிவி'க்கள், தொண்டர்கள் உட்கார நாற்காலிகள், டீ, சமோசா என, சாப்பிடும் அயிட்டங்கள் தயார் செய்ய சமையல் அறைகள் என, அனைத்து ஏற்பாடுகளும் கட்சி அலுவலகங்களில் தயார் நிலையில் உள்ளன.
இன்னொரு பக்கம் பலவிதமான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தால் யார் பிரதமர், யார் நிதி அமைச்சர் என்பது குறித்து, காங்கிரஸ் ஒரு பார்முலா தயார் செய்துள்ளதாம்.
அதிக சீட்கள் பெறும் கட்சிக்கு பிரதமர் பதவி, அடுத்த பெரிய கட்சிக்கு துணை பிரதமர், அதற்கடுத்த அதிக எம்.பி.,க்களைக் கொண்ட கட்சிக்கு நிதி அமைச்சர் பதவி என, காங்கிரஸ் பட்டியல் நீள்கிறது.
'பா.ஜ.,விலும் அமைச்சர்கள் பட்டியல் தயார்' என்கின்றனர். 'கன்னியாகுமரியில் தியானம் செய்யும் போது, அமைச்சரவை பட்டியலையும் மோடி முடிவு செய்திருப்பார்' என்கின்றனர், பா.ஜ.,வினர். இரண்டு கவர்னர்களுக்கு அமைச்சர் பதவி உண்டாம்; அதில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் ஒருவராம்.
தேசிய கட்சிகள் ஒரு பக்கம் இருக்க, தி.மு.க., உட்பட பல மாநில கட்சிகளும், அமைச்சர் பதவி கனவில் உள்ளன.