ADDED : மார் 30, 2024 11:52 PM

தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க.,விற்கும் இடையே தான் போட்டி என, இரண்டு கட்சிகளும் சொல்லி வருகின்றன. '40 தொகுதிகளும் நமதே என, பிரசாரம் செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், களத்தில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது என முதல்வருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவருக்கு துாக்கம் போச்சு' என, கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர்.
முதல்வரின் நெருங்கிய உறவினர், தேர்தல் களம் எப்படியிருக்கும் என, தனியார் நிறுவனம் வாயிலாக ரகசிய சர்வே எடுத்துள்ளாராம்.
இதன் முடிவுகளைப் பார்த்து, ஸ்டாலின், 'ஷாக்' ஆனதாக சொல்லப்படுகிறது. காரணம், இந்த சர்வேயின்படி பல தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாம்.
இந்த சர்வே முடிவுகளை, அ.தி.மு.க.,வுடன் தி.மு.க., பகிர்ந்து கொண்டுள்ளதாகவும், பங்காளிகள் இருவரும் மறைமுகமாக ஒன்று சேர்ந்து, பா.ஜ.,வை தமிழகத்தில் நுழைய விடக் கூடாது என கூறியதாகவும், டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பா.ஜ.,விற்கு எதிராக கடுமையான பிரசாரம், பணம் என இரண்டு ஆயுதங்களையும் தீவிரமாக பயன்படுத்த, தி.மு.க., தலைவர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அனைத்து சமூக வலை தளங்களிலும் பா.ஜ.,விற்கு எதிராக தவறான தகவல்களை தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதை அறிந்த பா.ஜ.,வும் சாம, தான, பேத, தண்டம் என, அனைத்து வழிகளிலும் தி.மு.க.,வை எதிர்க்க தயாராக உள்ளதாம்.

