டி.எம்.கிருஷ்ணா சங்கீத கலாநிதியா? கர்நாடக இசை உலகம் கொதிப்பு
டி.எம்.கிருஷ்ணா சங்கீத கலாநிதியா? கர்நாடக இசை உலகம் கொதிப்பு
UPDATED : மார் 22, 2024 06:42 AM
ADDED : மார் 22, 2024 12:50 AM

சென்னை: சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில், இந்தாண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக இசைக் கலைஞர்கள், ரசிகர்கள், சபா உரிமையாளர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பெற்ற விருதுகளை திரும்ப ஒப்படைக்கப் போவதாக சித்திரவீணை ரவிகிரண் தெரிவித்துள்ளார்.
கர்நாடக இசையின் வாய்ப்பாட்டு கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, பாரம்பரியம் மிக்க மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு டிசம்பரில் நடக்கும் இசை விழா, அவர் தலைமையில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறான கருத்து
இந்நிலையில், அவரின் தலைமையில் தாங்கள் கச்சேரி செய்வதில்லை என, பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியில் ஏற்கனவே விருது பெற்றோர், தங்களின் விருதை திருப்பி அனுப்பவும்முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, சித்திரவீணை ரவிகிரண் கூறியதாவது:
என் தாத்தாவான கோட்டுவாத்தியம் நாராயண அய்யங்காரும், என் குருவும், தந்தையுமான சித்திரவீணை நரசிம்மனும், மியூசிக் அகாடமியில் கச்சேரி செய்து புகழ் பெற்றவர்கள். நானும் 2 வயதில் அங்கு கச்சேரி செய்தேன். அப்போதே எனக்கு உதவித்தொகையையும் வழங்கியது.
ஏழாண்டுகளுக்கு முன், சங்கீத கலாநிதி விருதை எனக்கு மியூசிக் அகாடமி வழங்கியது. அந்த வகையில், அந்த பாரம்பரியம் மிக்க சபாவை நான் நன்றி உணர்வுடன் மதிக்கிறேன்.
அதேநேரம், கர்நாடக இசையை கீழ்த்தரமாக விமர்சித்தவரும், கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியவருமான டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை அறிவித்துள்ளது, என்னால் ஏற்க முடியவில்லை. அதேநேரம் அவர் மீதோ, அவரின் திறமை மீதோ எனக்கு அதிருப்தி இல்லை.
அவர் கர்நாடக இசை குறித்து கொண்டுள்ள அபிப்ராயங்கள், ரசிகர்களையும் சமூகத்தையும் பிரிக்கும் என்பதால், இதை ஏற்க முடியவில்லை.
அதனால், என் விருதை திருப்பி அளிக்க முன்வந்துள்ளேன். அதை, சபாவின் தலைவர் முரளிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளேன்.
பல காலமாக நாதஸ்வரம், தவில் இசையில் ஈடுபட்டுள்ளோரையும், கே.ஜே.ஜேசுதாஸ், பழனிவேல், மேண்டலின் ஸ்ரீனிவாஸ், வளையப்பட்டி, மாணிக்கம் முதலியார், ஷேக் சின்ன மவுலானா, காசிம் பாபு உள்ளிட்டோர்எல்லாம், கர்நாடக இசையில் கொடிகட்டி பறக்கும்அனைத்து சமூக மக்களையும் சிறுமைப்படுத்தும் வகையில், கர்நாடக இசையை பிராமணர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடுவதாக தவறான கருத்தை கூறுகிறார்.
இவரின் கருத்துகளை உண்மை என நம்பும் இளைஞர்கள், சமூக வேற்றுமையையும், வெறுப்பையும் கடைப்பிடிப்பர் என்பதால், இது போன்ற கருத்துகளில் என்னால் உடன்பட முடியவில்லை. அதனால் தான் விருதை திருப்பி அளிக்க முன்வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கர்நாடகவாய்ப்பாட்டு இரட்டையர்களான ரஞ்சனி - காயத்ரி தங்கள் எதிர்ப்பை அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு மியூசிக் அகாடமியின் இசை மாநாடு, டி.எம்.கிருஷ்ணாவின் தலைமையில் நடக்கும் என்பதால், அதிலிருந்தும், டிசம்பர் 25ல் நடத்த இருந்த கச்சேரியில் இருந்தும் நாங்கள் விலகுகிறோம்.
உடன்பாடு இல்லை
முக்கியமாக பிராமணர்களுக்கு எதிராகவும், ராம வழிபாட்டுக்கு எதிராகவும், பெண்களை ஆபாசமாகவும் பேசிய ஈ.வெ.ரா.,வை புகழ்ந்த டி.எம்.கிருஷ்ணாவின் கருத்தில் உடன்பாடு இல்லை.
தியாகராஜர், எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோரை பற்றிய, அவரின் கருத்துக்கும் உடன்பட முடியாது. அவரின் செயல்பாடுகள் அனைத்தும், தன் வாழ்நாளையே இசைக்காக ஒப்படைத்த கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும், தெய்வீகமான இசைக்கும், சமூக ஒற்றுமைக்கும் எதிராக உள்ளன. அதனால், இந்த முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து, 50 ஆண்டுகளாக கர்நாடக இசையை ரசித்து வரும் எஸ்.பார்வதி கூறியதாவது:
எனக்கு 56 வயதாகிறது. நான் 5 வயதில் இருந்து கர்நாடக இசைக் கச்சேரிகளை ரசித்து வருகிறேன். தெய்வாம்சம் பொருந்திய கர்நாடக இசையை உருகி உருகிப் பாடி, புகழ் பெற்றவர் தான் டி.எம்.கிருஷ்ணா. அவர் வளர்ந்த பின், 'நெகட்டிவ் பப்ளிசிட்டி' வாயிலாக பல்வேறு முரண்பாடுகளை கடைப்பிடித்து வருகிறார்.
அவர், கருப்பு உடை அணிந்து பக்திப் பாடல்களை பாடுவது, குல்லா அணிந்து ஹிந்து பாடல்களை பாடுவது, கர்நாடக இசை மேடையில் ஈ.வெ.ரா.,வை புகழ்வது, பாதி கச்சேரியில் வெளியேறுவது என, அவரின் செயல்பாடுகளால் ரசிகர்கள் புண்பட்டுள்ளனர்.
அதனால், இந்த விருது அவரால் பெருமையை குறைத்துக்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், கர்நாடக இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், ரசிகர்கள், சபா உரிமையாளர்கள் என பலதரப்பினரும், டி.எம்.கிருஷ்ணாவுக்கான விருது குறித்து தங்களின் அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த டி.எம்.கிருஷ்ணா?
கர்நாடக இசையை கவுரவமிக்க அகாடமியில் பயின்று, ரவி கிரண், சுதா ரகுநாதன், இரட்டை ஜடையுடன் பாடத் துவங்கிய சவும்யா, அவரின் குரு எஸ்.ராமநாதன், மாண்டலின் சீனிவாசனின் முதல் கச்சேரி முதல் கேட்டு ரசித்த நெடுநாளைய ரசிகை ஒருவர் கூறியதாவது:
'பாடறியேன், படிப்பறியேன்...' எனப் பாடிய, சிந்து பைரவி திரைப்படத்தைப் பார்த்து, காப்பி அடித்து, வெகுஜனங்களை ரசிக்க வைக்கிறேன் பேர்வழி எனக் கிளம்பி, தன் நெற்றியில் நெடுங்கோடிட்ட நாமத்தை தற்போது அழித்து, 'நான் மிகப் பெரியவன்' என சொல்லித் திரியும் நபர் தான் இவர்.
நாலு வார்த்தை இங்கிலிஷ் பேசிவிட்டால் மேதாவியா? சரளமாக இவர் பொழியும் பிருகாக்களை, டி.வி.சங்கரநாராயணன் கொடுக்கவில்லையா? மகாராஜபுரம் சந்தானம் கொடுக்கவில்லையா? லால்குடி ஜெயராமன் தான் சும்மா கிடந்தாரா?
முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை, கோவில்களில் நடக்கும் கதா காலட்சேபங்களைக் கேட்காத வெகுஜனங்களே இல்லை.
சாயங்கால நேரத்தில் சிலசிலுவென மெல்லிய காற்றடிக்க, இசையை ரம்மியமாகச் சேர்த்து பழங்காலத்தவர் சொல்லிய புராண கதைகளை, அண்டை அசலில் இருந்த பாய்க்கடை உரிமையாளர்கள் கூட கேட்டு மகிழ்ந்த காலத்தை இவர் அறிவாரா?
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலும், மதுரை கோவில்களும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலும், மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலும் சொல்லும் அந்த ரம்மியமான காட்சிகளை!
இந்த கதா காலட்சேப விவகாரங்களை, டி.டி.கிருஷ்ணமாச்சாரி நன்கு அறிவார். தற்போதைய நிர்வாகிகள் இவற்றை அறியாமல், ஏதோ செய்கின்றனர் என்று மட்டும் புரிகிறது.
இவ்வாறு முடித்தார் அந்த ரசிகை.

