கட்சிக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் ஓட்டு: வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க.,
கட்சிக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் ஓட்டு: வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க.,
ADDED : ஆக 11, 2024 02:09 AM

சென்னை: திருநெல்வேலி மேயராக இருந்த சரவணன் மீது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி, அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்வு செய்வதற்காக, கடந்த 5ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது.
தி.மு.க., சார்பில் மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் களம் இறங்கினார்.
தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 ஓட்டுகளையும், பவுல்ராஜ் 23 ஓட்டுகளையும் பெற்றனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் தேர்தலில் பங்கேற்கவில்லை. தி.மு.க., தலைமை ராமகிருஷ்ணனுக்கு ஓட்டு போடும்படி, தன் கட்சி கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தியும், 20 பேர் தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக ஓட்டளித்தது, கட்சி தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருநெல்வேலி மண்டல அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அன்பு அங்கப்பன் என்பவர், 'தி.மு.க., ஆட்சியின் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வாக்களித்த, திருநெல்வேலி மாநகராட்சியின், தி.மு.க.,வின் 20 மாமன்ற உறுப்பினர்களுக்கு, எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்' என, நகர் முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டிஉள்ளார்.
இந்நிலையில், ராமகிருஷ்ணன் எளிமையை பறைசாற்றி, நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து மேயராக பொறுப்பேற்றார்.

