போதை பொருள் கடத்தலால் அடுத்தடுத்து சிக்கும் தி.மு.க.,வினர்
போதை பொருள் கடத்தலால் அடுத்தடுத்து சிக்கும் தி.மு.க.,வினர்
ADDED : ஆக 04, 2024 02:43 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க., விவசாய அணி அமைப்பாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் போதை பொருள் கடத்திச் சென்றதாக, சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பின், இவர் அளித்த தகவலின்படி, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக, நேற்று முன் மீமிசல் அருகே காசாங்குடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், 43; ராஜா, 45, மற்றும் தி.மு.க., புதுக்கோட்டை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சவுந்திரபாண்டியனின் கார் டிரைவர் கண்ணன், 40, ஆகியோரை மீமிசல் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பொன்பேத்தி பகுதியில் வசிக்கும் தி.மு.க., ஒன்றிய குழு உறுப்பினரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க., விவசாய அணி அமைப்பாளராகவும் இருக்கும் சுந்தரபாண்டியன், 47, என்பவருக்கும் போதை பொருள் கடத்தலில் சம்பந்தம் உண்டு என போலீசாருக்கு தெரிய வந்தது.
போலீசிடம் சிக்கிய கண்ணனிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், முழு தகவல் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து, சவுந்திரபாண்டியனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, தி.மு.க.,வைச் சேர்ந்த ஜாபர் சாதிக், ராமநாதபுரம் இப்ராஹிம் உள்ளிட்டோர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி கைதாகி இருக்கும் நிலையில், சவுந்திரபாண்டியனும் சிக்கி இருப்பது, கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
சவுந்திரபாண்டியன், கண்ணன், சதீஷ் உள்ளிட்டோருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் தொடர்பு உண்டா என்ற ரீதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.