தமிழகத்தில் போதை பொருட்கள் ஆதிக்கம்; அறிவுரை வழங்கிட தம்பிதுரை கோரிக்கை
தமிழகத்தில் போதை பொருட்கள் ஆதிக்கம்; அறிவுரை வழங்கிட தம்பிதுரை கோரிக்கை
ADDED : ஆக 06, 2024 04:18 AM

நேற்று ராஜ்யசபாவில், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது: மது மற்றும் போதைப் பொருட்களால் எண்ணற்ற மக்கள், பாதிக்கப்படும் அளவுக்கு நிலைமைகள் சென்று கொண்டிருக்கின்றன. இது கவலைக்குரிய விஷயம். காரணம், மக்கள் உடல் நலத்தை கெடுப்பதோடு, நாட்டின் சமூகப் பொருளாதார விஷயங்களிலும் பெரும் கேட்டை ஏற்படுத்துகிறது.
இளைய சமுதாயத்தினரை முழுதுமாக கெடுக்கும் போதைப் பொருட்கள், அதற்கு அடிமையாவோரை மட்டும் பாதிப்பதில்லை, ஒட்டுமொத்த குடும்பத்தினரையும், சமூகத்தையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
ஓப்பியம் என்ற போதைப் பொருளின் உற்பத்தி பகுதிகளாக இருப்பவை தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்நாம். அதேபோல, போதைப் பொருட்கள் அதிக நடமாட்டமும் ஏற்றுமதி தளமாகவும் இருப்பவை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்றவை. அந்நாடுகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கிறது இந்தியா.
இதனாலேயே, இந்தியாவில் போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் அதிக அளவில் உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சாவும் போதைப் பொருட்களும் எளிதாக கிடைக்கும் நிலை உள்ளது. போதைப் பொருட்களின் ஆதிக்கத்தாலேயே தமிழகத்தில் படுகொலைகள் அதிகம் நடக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன், தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில், 65க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்து விட்டனர்.
மெத்தனால் எனும் வேதிப் பொருளை ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததே, இவர்கள் மரணத்துக்கு காரணம். போதைக்காகவே கள்ளச்சாராயத்தோடு மெத்தனாலை கலந்துள்ளனர்.
இது போன்ற கள்ளச்சாராயம், தமிழகம் முழுதும் கிடைக்கிறது. இது போன்ற நிலையை உடனடியாக மாற்றியாக வேண்டும். அதற்குரிய ஆலோசனைகளுடன் கூடிய அறிவுரையை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உடனே அனுப்ப வேண்டும். இவ்வாறு பேசினார்.
- நமது டில்லி நிருபர் -