கோவைக்கான மாஸ்டர் பிளான் வரைவு: அதிகளவில் ஆட்சேபனை, ஆலோசனைகள்
கோவைக்கான மாஸ்டர் பிளான் வரைவு: அதிகளவில் ஆட்சேபனை, ஆலோசனைகள்
ADDED : ஏப் 25, 2024 06:00 AM

தமிழகத்தில் எட்டு நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் வரைவில், ஆட்சேபம் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் தான் அதிகபட்சமாக 1500க்கும் அதிகமான ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபங்கள் வந்துள்ளன.
நகர்ப்புற வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கு, நகர ஊரமைப்புத் துறை சார்பில், 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமைத் திட்டம் தயார் செய்யப்படுகிறது. இந்த மாஸ்டர் பிளான், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு முறை, அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, திருத்தம் செய்யப்பட வேண்டும்.
பழைய மாஸ்டர் பிளான்
தமிழகத்தில் பல நகரங்களில், 20 - 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே மாஸ்டர் பிளான் தான் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, கோவையில் 1994ல், நடைமுறைப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான்தான், இப்போது வரை பயன்பாட்டில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள், அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளன.
இதன் காரணமாக, நிலப்பயன்பாடு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது எல்லாமே பிரச்னைக்கு உரியதாக மாறியுள்ளது.
கோவைக்கான மாஸ்டர் பிளானில், உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென்பது, இங்குள்ள தொழில் அமைப்பினரின், 20 ஆண்டுகால கோரிக்கை. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்பு, இப்போது தான் கோவை மாஸ்டர் பிளான் புதுப்பிக்கப்படவுள்ளது.
இதற்கான மாஸ்டர் பிளான் வரைவு தயாரிக்கப்பட்டு, கடந்த பிப்., 11ல், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நகர ஊரமைப்புத்துறை இணையப்பக்கத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இவற்றைப் பார்த்து, பொது மக்கள் ஆட்சேபம் மற்றும் ஆலோசனை தெரிவிக்க, 60 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
வந்து விட்டது தேர்தல்
கோவை மாஸ்டர் பிளான் வரைவுக்கான அரசாணை வெளியிட்டபோதே, மதுரை, ஈரோடு, திருப்பூர், திருச்சி சேலம், திருநெல்வேலி மற்றும் வேலுார் ஆகிய நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் வரைவுக்கும் அரசாணை வெளியிடப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வரைவுகள் வெளியிடப்பட்ட சில நாட்களில், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது.
கட்டுமானத்துறை, தொழில் அமைப்புகள், விவசாய அமைப்புகள் என பல தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனால், அமைப்புகள் சார்பிலும், தனி நபர்களாலும் ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை, மேலும் நீட்டிக்க வேண்டுமென்று 'கிரடாய்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், தமிழக அரசை வலியுறுத்தி வந்தன.
அதனை ஏற்று, கால அவகாசத்தை மே 15 வரையிலும் நீட்டித்து, நகர ஊரமைப்பு இயக்குனர் கணேசன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாஸ்டர் பிளான் வரைவு மீதான ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.
மற்ற நகரங்களில், 500க்கும் குறைவான ஆட்சேபங்களே வரப் பெற்றுள்ள நிலையில், கோவையில் 1500க்கும் அதிகமான கருத்துக்கள் வரப் பெற்றுள்ளன.
நகர ஊரமைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் மாஸ்டர் பிளான் குறித்த விழிப்புணர்வு அதிகம். அதனால் மனுவாகவும், இ - மெயில், இணையப்பக்கம் என எல்லா வழிகளிலும், ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகளைக் குவித்துள்ளனர்' என்றார்.
நகர ஊரமைப்புத்துறை அதிகாரிகளே மலைத்துப் போகும் அளவுக்கு, கோவைமக்களிடமிருந்துகருத்துகள் வரப் பெற்றுள்ளதால்,அதில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அதிகம் இருப்பதும் உறுதியாகியுள்ளது.
அதைச் செய்யாமல் அவசர கதியில், புதுப்பிக்கப்பட்ட மாஸ்டர் பிளானை நடைமுறைப்படுத்தினால், தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்
-நமது சிறப்பு நிருபர்-.

