வீட்டிலிருந்தபடி ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத முதியோர்
வீட்டிலிருந்தபடி ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத முதியோர்
ADDED : மார் 28, 2024 05:51 AM

சென்னை : தபால் ஓட்டளிக்க, 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்தும், பெரும்பாலானோர் அதை பயன்படுத்த முன்வரவில்லை; ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் ஓட்டை பதிவு செய்ய, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம், தபால் ஓட்டளிக்க விரும்பினால், '12 டி' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் எனக் கூறி, விண்ணப்பத்தை வழங்கினர்.
அந்த படிவத்தை பூர்த்தி செய்தால், ஓட்டுப்பதிவு நாளன்று, ஓட்டுச்சாவடி அலுவலர், போலீசார் வீட்டிற்கு வந்து, தபால் ஓட்டை வழங்குவர்.
சம்பந்தப்பட்ட நபர், தான் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகிறாரோ, அவருக்கு ஓட்டை பதிவு செய்து, ஓட்டுச்சாவடி அலுவலர் வைத்திருக்கும், ஓட்டுப் பெட்டியில் தன் ஓட்டை செலுத்த வேண்டும்.
ஆனால், தபால் ஓட்டளிக்க பெரும்பாலானோர் விரும்பவில்லை. ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டளிக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 6 லட்சத்து 13,991 பேர், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்.மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 61,730 பேர் உள்ளனர். இவர்களில் 85 வயதுக்கு மேற்பட்டோரில் 4 லட்சத்து 30,734 பேர், தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து, விண்ணப்பப் படிவங்களை பெற்றனர். ஆனால், 77,445 பேர் மட்டுமே, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர்.
மாற்றுத் திறனாளி வாக்காளர்களில் 3 லட்சத்து 65,875 பேர், தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் பெற்றனர். அவர்களில் 50,676 பேர் மட்டுமே, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கியவர்கள் மட்டுமே, வீட்டிலிருந்தபடி ஓட்டளிக்க முடியும். அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாது. மற்றவர்கள் ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டளிக்கலாம்.
அதேபோல், பத்திரிகை உட்பட அத்தியாவசியப் பணிகளில் இருப்போரும், தபால் ஓட்டளிக்க, இம்முறை தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி இருந்தது. தமிழகத்தில் 16 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

