மோடி பேச்சுக்கு விளக்கம் அளிக்க நட்டாவுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு
மோடி பேச்சுக்கு விளக்கம் அளிக்க நட்டாவுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு
ADDED : ஏப் 26, 2024 01:10 AM

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நட்டாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்களுக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது, இதுவரை நடைமுறையாக இருந்து வந்தது. விதிமீறல் புகார் யார் மீது கூறப்பட்டதோ, அவருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவருக்கு அனுப்பி இருப்பது இதுவே முதல் தடவை.
வரும் 29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. மோடியை தவறாக பேசியதாக ராகுல் மீது கூறப்பட்ட புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவருக்கும் 29ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 21ம் தேதி பிரசாரம் செய்த மோடி, 'நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் உள்ள தங்க ஆபரணங்களை கணக்கிட்டு, அவற்றை இந்த நாட்டுக்குள் ஊடுருவி வந்தவர்களுக்கு, அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு பகிர்ந்து அளிப்போம் என, தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
'நாட்டின் சொத்துக்கள் மீது முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உள்ளதாக மன்மோகன் சிங் தலைமை வகித்த காங்., அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது' என்றார்.
முஸ்லிம்கள் என்று மோடி குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், அவர்களைத்தான் குறிவைத்து பேசினார் என்பதை யாரும் சந்தேகிக்கவில்லை. முதல் முறையாக மதத்தின் பெயரால் ஒரு பிரதமர் பிரசாரம் செய்தார் என, மோடியின் பேச்சு பற்றி எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி தெரிவித்தன.
கடந்த மாதம் சேலம் கூட்டத்தில் பேசும்போது, 'இது, சக்தியை வழிபடுபவர்களுக்கும், அதை அழிக்க நினைப்பவர்களுக்கும் இடையிலான தேர்தல்' என, இண்டியா கூட்டணியை சுட்டிக் காட்டி பேசினார்.
இவ்வாறு மோடி தொடர்ந்து மத ரீதியாக பிரசாரம் செய்து, மக்கள் மத்தியில் பிரிவினை உணர்வை துாண்டுவதால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனில் புகார் அளித்தன.
இதற்கு பதிலடியாக, கார்கே மற்றும் ராகுலின் பேச்சு குறித்து பா.ஜ., தலைவர்கள் புகார் அளித்தனர்.
'ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு இல்லை; பழங்குடி இனத்தவர் என்பதால் ஜனாதிபதி முர்முவுக்கும் அழைப்பு தரவில்லை' என்று கார்கே பேசினார். ராகுலும் வடக்கு - தெற்கு பிரிவினையை துாண்டும் விதமாக பேசி வருகிறார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., கூறியது.
புகார்கள் குறித்து தேர்தல் கமிஷன் பதில் கூறாமல் மவுனம் காத்தது. பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் அஞ்சுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் தான் இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில் மோடி, ராகுல், கார்கே பெயர்கள் இல்லை. கட்சி பதில் அளிக்க வேண்டும் என்றே கேட்கப்பட்டு உள்ளது.
இது குறித்து காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
பிரதமர் மோடியின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக இருப்பதை கமிஷனின் கவனத்துக்கு எடுத்து சென்றோம்.
இதற்கு முன் பிரதமராக இருந்த எவர் மீதும் இப்படிப்பட்ட புகார் வந்ததில்லை. மோடி மீது இரண்டாவது முறையாக புகார் அளித்துள்ளோம். அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும்.
ஆனால் மோடி, அமித் ஷா சம்பந்தப்பட்ட விஷயங்களில் தேர்தல் கமிஷன் எப்போதும் உஷாராக செயல்படுகிறது.
இவ்வாறு கூறினார்.

