UPDATED : மே 19, 2024 03:30 AM
ADDED : மே 19, 2024 12:17 AM

சென்னை: தமிழக அரசியல் குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்களில், தற்போது ஒரு விஷயம் பரபரப்பாக அலசப்படுகிறது. சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் கட்சித் தலைவர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தினார். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து, சில தி.மு.க., தலைவர்கள் டில்லி அரசியல்வாதிகளுடன் பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக டில்லியில் பேசப்படுவது இதுதான்... -'ஜூன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவு எப்படியிருக்கும்? பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால் தி.மு.க.,வின் நிலை என்ன?' என்பது குறித்து, தி.மு.க., கூட்டத்தில் ஆலோசனை நடந்ததாம்.
'தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சி அமைப்பது நடக்காத காரியம்' என, தி.மு.க., நினைக்கிறதாம். அத்துடன், 'இண்டியா' கூட்டணி தேசிய அளவில் தி.மு.க.,வை முன் நிறுத்தவில்லை என்ற வருத்தமும் தி.மு.க.,விடம் உள்ளது.
வடமாநிலங்களில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டங்களுக்கு தி.மு.க., அழைக்கப்படவில்லை. இதனால் காங்., - -தி.மு.க., இடையே உள்ள உறவில், லேசான விரிசல் எனவும் பேசப்படுகிறது.
இது குறித்து, காங்கிரஸ் தலைவர் ஒருவர், 'மம்தாவைப் போல தி.மு.க.,வும் சாக்கு சொல்கிறது. மம்தா, இண்டியா கூட்டணிக்கு வெளியே இருப்பது போல, தி.மு.க.,வும் தேர்தல் முடிவுகளுக்குப் பின், மோடியை ஆதரிக்க வழி தேடுகிறது' என்கிறார்.
'காங்கிரஸ் கட்சியை தன்னிச்சையாக தமிழகத்தில் வளர்க்க வேண்டும்' என, தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை சமீபத்தில் பேசியதையும், அந்த காங்., தலைவர் சுட்டிக்காட்டுகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு விவகாரமும் டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 'மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால், தி.மு.க., மீதுள்ள வழக்குகள் தீவிரமாகும். அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் விஷயத்திலும் தி.மு.க., சிக்கும்.
இதிலிருந்து மக்களை திசை திருப்ப, சட்டசபையை கலைத்து விட்டு, இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தி, உதயநிதியை முதல்வராக்கி விடலாம் என்பது ஸ்டாலின் திட்டம். ஆனால், சில தி.மு.க., தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.

