ADDED : ஏப் 28, 2024 12:51 AM

சென்னை: மின்வழித் தடங்களில் இருந்து அதிக திறனில் வரும் மின்சாரத்தின் அளவை குறைத்து, சீராக மின் வினியோகம் செய்யும் பணியை டிரான்ஸ்பார்மர் மேற்கொள்கிறது. எப்போதும் மின்சாரம் செல்வதால் டிரான்ஸ்பார்மர்கள் அதிக வெப்பத்துடன் இருக்கின்றன.
எனவே, குளிர்ச்சியான நிலையில் வைக்க டிரான்ஸ்பார்மருக்குள், 'மினரல் ஆயில்' நிரப்பப்பட்டுள்ளது. மின்பளு அதிகரிக்கும் போதோ அல்லது வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும் போதோ, டிரான்ஸ்பார்மருக்குள் இருக்கும் ஆயிலின் வெப்பம் அதிகரிக்கும்.
அப்போது, ஆயிலின் நிலை மேலெழுவது, கீழே செல்வது என மாறுபடும். அந்த சமயத்தில், வெளிப்புற காற்று டிரான்ஸ்பார்மரில், 'பிரீத்தர்' சாதனம் வாயிலாக உள்ளே செல்லும்.
காற்றில் உள்ள ஈரப்பதம், துாசி உள்ளே சென்று, டிரான்ஸ்பார்மரில் உள்ள ஆயிலில் கலந்து விடுகின்றன. இதனால், டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகின்றன.
இதைத்தடுக்க, வெளிப்புற காற்று உள்ளே செல்லாத வகையில், மாற்று தொழில்நுட்பத்தை மின்வாரியம் கண்டுபிடித்துள்ளது. இதனால், வெளிப்புற காற்று உள்ளே செல்ல முடியாது. டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு செலவு மற்றும் பழுதடைவதை குறைக்கிறது.
இந்த கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்ட காப்புரிமை இம்மாதம், 16ம் தேதி முதல், 20 ஆண்டுகளுக்கு இருக்கும்.

