மழையில்லாமல் வறண்ட நீராதாரங்கள் விவசாயிகள் தவிப்பு
மழையில்லாமல் வறண்ட நீராதாரங்கள் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஏப் 11, 2024 04:40 AM

உடுமலை : மலையடிவார கிராமங்களில் நிலவும் வறட்சியால், தென்னை, மா மரங்களை காப்பாற்ற வழியில்லாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. தென்னை, காய்கறி உட்பட பல்வேறு சாகுபடி நடந்து வருகிறது.
வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைகள் இப்பகுதி விவசாயத்திற்கு கைகொடுக்கிறது. அவ்வகையில், உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், கொங்குரார்குட்டை உட்பட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நீண்ட கால பயிர்களாக, தென்னை, மா சாகுபடி அதிகளவு உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், மழை நீர் ஆதாரங்களில் வரும் தண்ணீர், ஆங்காங்கே தேங்கி நின்று, நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக இருக்கும்.
குறிப்பாக, குளங்கள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளில் பல மாதங்கள் தேங்கி நிற்கும் தண்ணீரால், அப்பகுதியினர் பயன்பெற்று வந்தனர்.
ஆனால், தற்போது, போதிய மழை இல்லாததால், அப்பகுதியிலுள்ள மழை நீர் ஓடைகள், குளம், குட்டை முற்றிலுமாக வறண்டு விட்டது. இதனால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நிலத்தடி நீர் மட்டமும் சரிந்து, விளைநிலங்களில், கிணறு மற்றும் போர்வெல்களில், போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
எனவே, தென்னை மற்றும் மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். சிலர், தென்னை மரங்கள் காய்ந்து போவதை தவிர்க்க, தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள, நீராதாரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஓடைகளில், திடக்கழிவுகளை கொட்டி குப்பை மேடாக மாற்றி விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரமும் பாதிக்கப்பட்டுளளது.
குளங்களில், விதிகளை மீறி, அதிகளவு மண் எடுத்து விட்டதால், தண்ணீர் தேங்குவதில்லை. மலைக்குன்றுகளில் இருந்து சமவெளிக்கு வரும் ஓடைகளும் மண் மேடாகவும், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும் காணப்படுகிறது.
இந்தாண்டு போதிய மழை இல்லாததால், வறட்சி துவங்கி, பல ஆயிரம் தென்னை, மா மரங்களை காப்பாற்றுவதே போராட்டமாகி விட்டது. மழை இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வருவாய்த்துறை வாயிலாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

