பாத்ரூம் போக பர்மிஷன் வாங்கணும்; ரயில் பெண் டிரைவர்கள் வேதனை
பாத்ரூம் போக பர்மிஷன் வாங்கணும்; ரயில் பெண் டிரைவர்கள் வேதனை
ADDED : மே 13, 2024 03:22 AM

புதுடில்லி : ரயில்களில் பணியாற்றும் பெண் டிரைவர்கள்,கழிப்பறைக்கு செல்வதற்கு, 'வாக்கி டாக்கி' வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளது, நெருடலாகவும், சிக்கலாகவும் உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்தியன் ரயில்வேயில், 1,700 பெண் ரயில்வே டிரைவர்கள் உள்ளனர். இவர்களில், 90 சதவீதம் பேர் உதவி டிரைவர்களாக உள்ளனர்.
அதனால் ரயிலில், ஆண் டிரைவருக்கு உதவியாக பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த பெண் டிரைவர்கள், பணியின்போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இது குறித்து பெண் டிரைவர்கள் கூறியுள்ளதாவது:
ரயிலில் பணியாற்றும்டிரைவர்கள் மற்றும் உதவி டிரைவர்கள், கழிப்பறை செல்வதற்கு அல்லது உணவு சாப்பிட செல்வதற்கு, வாக்கி டாக்கி வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டும். ரயில் இன்ஜினில் உள்ள லோகோ பைலட் என்ற டிரைவருக்கு தெரிவிக்க வேண்டும்.
அவர், அதற்கடுத்து வரும் ஸ்டேஷன் மாஸ்டருக்கு வாக்கி டாக்கி வாயிலாக தெரிவிப்பார். அவர், கட்டுப்பாட்டு துறைக்கு தெரிவிப்பார்.
பயணியர் ரயிலாக இருந்தால், அதில் ஏதாவது ஒரு பெட்டியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தலாம். சரக்கு ரயிலாக இருந்தால், அதற்கடுத்த ரயில் நிலையத்தில் நிறுத்தி, அங்குள்ள கழிப்பறையையே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு வாக்கி டாக்கியில் தகவல்களை பரிமாறிக் கொள்வது, நெருடலாகவும், சிக்கலாகவும் உள்ளது. இந்த நடைமுறை பல காலமாக உள்ளது. பெண்களுக்கு உள்ள இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.