கள்ளக்குறிச்சி விவகாரம்: அரசு வழங்கிய நிவாரண நிதியால் குடும்ப உறவுகளில் விரிசல்
கள்ளக்குறிச்சி விவகாரம்: அரசு வழங்கிய நிவாரண நிதியால் குடும்ப உறவுகளில் விரிசல்
ADDED : செப் 03, 2024 06:06 AM

கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 18, 19ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் வாங்கி குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர். இச்சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது.
இதனையடுத்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 10 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இவ்வளவு தொகையா, இது கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பு செய்வதாக மாறிவிடுமே என சமூக வலைதளம் உட்பட பெரும்பான்மையான மக்களிடையே பேசு பொருளானது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு அரசு அறிவித்த நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. புதிய வீடுகள் கட்டுதல், வட்டிக்கு பணம் வழங்குதல், புதிய வாகனங்கள் வாங்குதல் போன்ற பல்வேறு வகைளில் அரசு வழங்கிய நிதியை உபயோகம் செய்து வருகின்றனர்.
ஒரு சில குடும்பத்தினர் வாழ்வாதரத்திற்கேற்ப நல்வழியில் உபயோகம் செய்து வரும் நிலையில், சிலர் ஆடம்பர செலவினங்களுக்கு பயன்படுத்தியும் வருகின்றனர். மேலும் அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாயை குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பிகள் மற்றும் உடன் பிறந்த பெண்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இடையே பணத்தை பகிர்ந்து கொள்வதில், பிரச்னை நிலவி வருகிறது.
ஒரு சில குடும்பங்களில் கடும் பிரச்னைகள் ஏற்படும் நிலையில், அப்பகுதியின் முக்கியஸ்தர்கள் முன்னிலைக்கு எடுத்துச் சென்று பங்கீடு மேற்கொள்ளப்படுகிறது. அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி சிலரது குடும்ப உறவுகள் இடையே விரி சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
-நமது நிருபர்-