'காலச்சுவடு' ஆசிரியருக்கு பிரான்சின் செவாலியே விருது
'காலச்சுவடு' ஆசிரியருக்கு பிரான்சின் செவாலியே விருது
ADDED : ஜூன் 07, 2024 11:28 PM

'காலச்சுவடு' பதிப்பகத்தின் ஆசிரியர் கண்ணன் சுந்தரத்துக்கு, பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது டில்லியில் வழங்கப்பட்டது.
கலை மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு, பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, உலகளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வரும் காலச்சுவடு பதிப்பகத்துக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டில்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு துாதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளரும், ஆசிரியருமான கண்ணன் சுந்தரத்துக்கு, நம் நாட்டுக்கான பிரான்ஸ் துாதர் தியேரி மாது, செவாலியே விருதை வழங்கி கவுரவித்தார்.
அப்போது பேசிய தியேரி மாது கூறியதாவது:
பிரான்ஸ் நாட்டு இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்து, தமிழ் வாசகர்களுக்கு காலச்சுவடு அறிமுகப்படுத்தியுள்ளது; அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
மொழிபெயர்ப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில், இது நம் கலாசார மற்றும் மொழியியல் பிளவுகளை கட்டுப்படுத்துகிறது. உலகளாவிய இலக்கியத்தின் செழுமையை வாசகர்கள் பாராட்ட உதவுகிறது.
படைப்புகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பதன் வாயிலாக, இலக்கிய பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. அது மட்டுமின்றி அறிவுசார் நிலப்பரப்பை அது வளப்படுத்துகிறது.
பிரான்ஸ் அதிபரால் உருவாக்கப்பட்ட 'நேஷனல் டு மெரைட்' என்ற இலக்கியம் வாயிலாக உருவாகியுள்ள உங்கள் பயணத்தையும், இதனால் வளரும் இரு நாட்டு நட்புறவுக்கான பங்களிப்பையும் நாங்கள் வணங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்
-- நமது சிறப்பு நிருபர் --.