UPDATED : ஜூலை 24, 2024 03:58 AM
ADDED : ஜூலை 24, 2024 01:35 AM

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல், நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தும் முறையில், திருத்தம் கொண்டு வந்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நீண்ட கால மூலதனங்களின் வாயிலாக ஈட்டப்படும் லாபத்திற்கு நாம், 'இன்ப்ளேஷன் இண்டெக்ஸ்' கணக்கை அடிப்படையாக வைத்து, வரி செலுத்தலாம் என்ற சலுகை இருந்தது. அந்த வரி, 20 சதவீதமாக இருந்தது.
'இன்ப்ளேஷன் இண்டெக்ஸ்' என்றால் என்ன...
நம் சொத்தின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம்; அதை விற்றால் நமக்கு, 10.5 லட்சம் ரூபாய் கிடைக்கும் எனில், இதில், மொத்தமாக, 50,000 ரூபாய் லாபம் என்று நாம் கருதி விட முடியாது.
ஏனெனில், பணத்தின் மதிப்பு, நாளடைவில், குறையும் என்பதால், இந்த பண வீக்கத்தை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
எனவே, நாம் லாபமாக ஈட்டிய, 50,000 ரூபாயின் மதிப்பு குறையும்போது, மொத்தமாக அதற்கான வரியைக் கட்ட வேண்டும் என்பது நமக்கு சுமை தானே!
இந்தச் சுமையைத் தவிர்க்க, 'இன்ப்ளேஷன் இண்டெக்ஸ்' என்ற குறியீட்டு மதிப்பை நிர்ணயித்து, அதற்கேற்றவாறு வரி கட்டினால் போதும் என, இதுநாள் வரை சலுகை வைத்திருந்தது அரசு.
தற்போது அந்தச் சலுகை முற்றிலுமாக நீக்கப்பட்டு, மொத்த லாபத் தொகைக்கும் 12.5 சதவீதம் வரி கட்டியாக வேண்டும்.