UPDATED : ஏப் 10, 2024 03:23 AM
ADDED : ஏப் 10, 2024 03:21 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் முக்குறுத்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன் மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி என 13 அணைகள் உள்ளன. இவற்றின் மூலம், 833 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். மாவட்டத்தில் கடந்தாண்டில் பருவமழை பொய்த்தது.
20 சதவீதம்
அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் உள்ள அணைகளில், 20 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.
நடப்பாண்டிலும், ஏப்., முதல் வாரம் வரை மழைக்கான எவ்வித அறிகுறியும் இல்லை; மாறாக கடும் வெயில் தென்படுகிறது.
இந்நிலையில், குந்தா வட்டத்தில் முக்கிய அணைகளான, 184 அடி கொண்ட எமரால்டு அணை; 171 அடி கொண்ட அவலாஞ்சி அணை; 210 அடி கொண்ட அப்பர் பவானி அணைகள் பெரிய அணைகளாகவும், மின் உற்பத்திக்கு முக்கிய அணைகளாவும் உள்ளன.
![]() |
குறிப்பிட்ட அணைகளின் தண்ணீர் இருப்பு தரை தட்டியதால் காட்டுகுப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மீதமுள்ள மின் நிலையங்கள் வாயிலாக, தினசரி, 150 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மின் உற்பத்தி படிப்படியாகக் குறைந்ததால், கோவை உட்பட பல்வேறு தொழில் நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
'பீக் ஹவர்'
குந்தா மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் பிரேம்குமார் கூறியதாவது:
![]() |
கடந்தாண்டில் பருவமழை பொய்த்தது. அணைகளில் தண்ணீர் இருப்பு அடியோடு குறைந்தது. நடப்பாண்டிலும் இதுவரை மழைப்பொழிவு இல்லை.
'பீக் ஹவர்' எனப்படும், காலை, 6:00 மணி முதல், 9:00 மணி; மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
சில அணைகளில் தண்ணீர் இல்லாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. மழை வந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.



