கோயில் அர்ச்சகர்களுக்கு காணிக்கை: அரசு உத்தரவு வாபஸ்
கோயில் அர்ச்சகர்களுக்கு காணிக்கை: அரசு உத்தரவு வாபஸ்
UPDATED : பிப் 10, 2025 09:27 AM
ADDED : பிப் 10, 2025 05:59 AM

மதுரை : கோயிலில் பக்தர்கள் அர்ச்சகர்
தட்டில் விருப்பத்துடன் வைக்கும் காணிக்கையை உண்டியலில் செலுத்த
அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
ஹிந்து அமைப்புகள் கண்டனம்
அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ள அறநிலையத்துறைக்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறியிருப்பதாவது: மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் அர்ச்சகர் தட்டில் விருப்பத்துடன் வைக்கும் காணிக்கையை உண்டியலில் செலுத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
அர்ச்சகர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை.பக்தர்கள் விரும்பி செலுத்தும் காணிக்கையை உண்டியலில் போட உத்தரவிடுவதால் அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அர்ச்சகர்களை திருடர்கள் போல நினைத்து அவமதிக்கின்றனர்.
பிராமணர் சமூகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் திராவிட மாடல் அரசு இதுபோன்று காயப்படுத்துகிறது. இது அச்சமூகத்தை கோயிலை விட்டு வெளியேற்றுவதற்கான சதித் திட்டம். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்த கோயில் செயல் அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதிகார செயல்
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் கூறியிருப்பதாவது: அரசின் இந்த உத்தரவு சர்வாதிகார செயல். அர்ச்சகர்களின் வயிற்றில் அடிக்கும் இதனை கண்டிக்கிறேன். கடவுளை வர்த்தக பொருளாக்கி வருமானம் பெருக்கும் திராவிட மாடல் அரசை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இதே நிலை நீடித்தால் உண்டியலில் காணிக்கை போடும் பக்தர்கள் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும். அர்ச்சகர்களுக்கு வழங்கும் சம்பளம் குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்குமா. தட்டில் போடும் காணிக்கையை தட்டிப்பறிக்கும் அரசாக இது உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.