வீடு தேடி வரும் மதுபானங்கள்: ஸ்விக்கி - சொமேட்டோ திட்டம்
வீடு தேடி வரும் மதுபானங்கள்: ஸ்விக்கி - சொமேட்டோ திட்டம்
UPDATED : ஜூலை 17, 2024 11:46 AM
ADDED : ஜூலை 17, 2024 03:04 AM

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பீர், ஒயின் போன்ற மிதமான மதுபானங்களை வீடுகளுக்கே சென்று 'டெலிவரி' செய்ய பிரபல உணவு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, எந்த புதிய திட்டமும் தங்களிடம் இல்லை என 'டாஸ்மாக்' நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹோட்டல்களை தேடி அலைந்து விதவிதமான உணவு வகைகளை ருசித்த காலம் மாறி, அவற்றை வீடுகளுக்கே கொண்டு வந்து தரும் சேவையை, 'ஸ்விக்கி, சொமேட்டோ' உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. துவக்கத்தில், உணவுகளை மட்டுமே டெலிவரி செய்து வந்த இந்நிறுவனங்கள் நாளடைவில் மளிகைப் பொருட்கள், பால், தயிர், மருந்து, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் டெலிவரி செய்ய துவங்கின.
இதன் அடுத்தக்கட்டமாக, மதுபானங்களையும் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்ய நீண்ட காலமாக, பல முன்னணி வணிக நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் இதற்கு அனுமதி தராத காரணத்தால், இந்த சேவையை துவங்க முடியவில்லை.
இந்நிலையில், டில்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழகம், கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் டெலிவரி தளங்கள் வாயிலாக மதுபானங்களை விற்க ஸ்விக்கி, பிக்பாஸ்கட், சொமேட்டோவின் பிளிங்கிட் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.
இதற்கான சோதனை திட்டங்களை அந்த நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதன் வாயிலாக முதல்கட்டமாக இலகுரக மதுபானங்களான பீர், ஒயின் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய - மாநில அரசுகளின் ஒப்புதலுடன் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. அதேசமயம், மாநில அரசுகளும் ஆன்லைன் வாயிலாக மதுபான வகைகளை, 'டோர் டெலிவரி' செய்வது தொடர்பாக உணவு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விதிமுறைகள், கண்காணிப்பு மற்றும் எந்தெந்த கடைகளிலிருந்து வினியோகம் செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் விரிவாக அலசப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலின் போது மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் வாயிலாக மதுபான விற்பனைக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.
நோய்த் தொற்று குறைந்ததை அடுத்து, அனுமதி திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், மஹாராஷ்டிராவில் சில உள்ளூர் ஆன்லைன் தளங்கள் தொடர்ந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மதுபான வகைகளை ஸ்விக்கி நிறுவனம் ஹோம் டெலிவரி செய்து வருகிறது. அதேபோல், ஜார்க்கண்ட் அரசின் அனுமதியை பெற்ற பின் ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள், இந்த சேவையை ராஞ்சியில் துவங்கின. இங்கு மீதமுள்ள நகரங்களில் இந்த சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளன.
தற்போது வரை ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டுமே மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு மாநிலங்களிலும் ஆன்லைன் டெலிவரி விற்பனை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதையடுத்தே, நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த திட்டத்தை முன்னெடுக்க உணவு நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இது குறித்து உணவு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் டெலிவரி வர்த்தகத்தை அதிகரிக்கவே இதுபோன்ற சேவைகள் திட்டமிடப்படுகின்றன. பெண்கள், வயதானவர்கள் கடைகளுக்கு வந்து வாங்கும் அசவுகரியத்தை தடுக்கும் நோக்கில் இது முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டம் வாயிலாக, எங்கள் பட்டியலில் மதுபான கடைகள் பிரிவைத் தேர்ந்தெடுத்து மது வகைகளை பெற முடியும்.
இதற்கு வயது சரிபார்ப்பு மற்றும் பயனர் அங்கீகாரம் போன்றவை பாதுகாப்பு அம்சங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மது ஆர்டர் செய்யும் நபர் அடையாள அட்டை அல்லது செல்பி புகைப்படங்களை அப்லோட் செய்ய வேண்டும். மதுவுக்கான அளவு வரம்புகள் உள்ளிட்ட விதிகளும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.