ம.பி., முன்னாள் முதல்வருக்கு மத்தியில் முக்கியமான பதவி?
ம.பி., முன்னாள் முதல்வருக்கு மத்தியில் முக்கியமான பதவி?
ADDED : ஏப் 28, 2024 12:11 AM

போபால்: மத்திய பிரதேசத்தின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமையை உடைய, பா.ஜ.,வின் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு, மத்தியில் முக்கியமான பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள, 29 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலில், 28 தொகுதிகளில் பா.ஜ., வென்றது. சிந்த்வாரா தொகுதியில் மட்டும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் வென்றார்.
இந்த முறை, 29 தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்படுவது விதிஷா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் வெற்றியைத்தான்.
கடந்த, 2005 முதல், 2023 வரை அவர் முதல்வராக இருந்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலை, முதல்வர் வேட்பாளராக அவரை அறிவிக்காமல் பா.ஜ., சந்தித்தது.
சிவ்ராஜ் சிங் சவுகான் தீவிர பணியால், கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், மோகன் யாதவை முதல்வராக பா.ஜ., அறிவித்தது.
ஒதுக்கப்படுகிறார் என்று கூறப்பட்ட நிலையில், விதிஷா லோக்சபா தொகுதியின் வேட்பாளராக சிவ்ராஜ் சிங் சவுகான் நிறுத்தப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இங்கு பிரசாரத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, சிவ்ராஜ் சிங் சவுகானை புகழ்ந்து தள்ளினார். கட்சியின் பல்வேறு நிலைகளிலும், முதல்வர்களாகவும் அவருடன் பணியாற்றிய அனுபவத்தை மோடி பகிர்ந்து கொண்டார்.
மேலும், வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், அவருக்கு டில்லியில் மிகப் பெரிய பொறுப்பு காத்திருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். இதனால், சிவ்ராஜ் சிங் சவுகான் ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.

