சென்னையில் தொடரும் சம்பவம்: பெயின்டரை முட்டிய மாடுகள் 'அரெஸ்ட்'
சென்னையில் தொடரும் சம்பவம்: பெயின்டரை முட்டிய மாடுகள் 'அரெஸ்ட்'
ADDED : மார் 07, 2025 08:25 AM

சென்னை: சென்னை அடையாறு, கெனால் பேங்க் சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார், 48. பெயின்டர். கடந்த 4ம் தேதி, இவரது வீட்டு முன் இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
சத்தம் போட்டு துரத்தியும் அவை நகராததால், அருகில் சென்று அவற்றை விரட்டினார். அதில் ஒரு மாடு ஆக்ரோஷமாக சிவகுமாரை முட்டி தள்ளியது. இதில், அவரது வலது கையில் எலும்பு முறிவும், உடலில் காயமும் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, 173வது வார்டு சுகாதார அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான ஊழியர்கள், சண்டையிட்ட மாடுகள் குறித்து, அப்பகுதியினரிடம் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மாடுகள் என்பது தெரிந்தது. உடனே, இரண்டு மாடுகளையும் பிடிக்க முயன்றனர்.
இதற்கு, ராஜ் மற்றும்அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்களை அடிக்க பாய்ந்தனர்.இதையடுத்து, அடையாறு போலீசார் பாதுகாப்புடன், இரண்டு மாடுகளையும் சிறை பிடித்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மையத்தில் அடைத்தனர்.
சிவகுமாருக்கு ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாட்டின் உரிமையாளர் ராஜிடம் வலியுறுத்தி உள்ளனர்.