UPDATED : பிப் 24, 2025 05:40 AM
ADDED : பிப் 23, 2025 02:20 AM

புதுடில்லி: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது, இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தையும், எதிர்க்கட்சிகளுக்கு சிக்கலையும் உண்டாக்கி உள்ளது.
அதில் ஒன்று, இந்திய தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, அமெரிக்கா அளித்த நிதி.
'இந்தியாவின் தேர்தல்களில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, அமெரிக்க அதிபராக பைடன் இருந்தபோது வழங்கிய நிதி விவகாரத்தில், ராகுல் மற்றும் பல சீனியர் பத்திரிகையாளர்களுக்கும் சிக்கல் ஏற்படும்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த பணம், 2024ல் மோடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தரப்பட்டதாம்; ஆனால், கடைசியில் இந்த முயற்சி தோல்வியை தழுவ, மீண்டும் பிரதமரானார் மோடி.
இந்த நிதி, ஜார்ஜ் சோரஸ் என்ற அமெரிக்க பணக்காரர் வாயிலாக, இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. 'பிரதமர் மோடியை தோற்கடிக்க நான் உதவுவேன்' என கூறியவர், இந்த சோரஸ். இவருக்கும், காங்கிரசுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்கா சென்றார் ராகுல்; அங்கு, பைடன் அலுவலகத்தில் உள்ள பல சீனியர் அதிகாரிகளை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், 'இந்தியாவில் ஜனநாயகம் தாக்கப்படுகிறது' என்றார். 'வெளிநாட்டில், இந்திய எதிர்க்கட்சி தலைவர் எப்படி இவ்வாறு பேசலாம்?' என, பலத்த எதிர்ப்பு அப்போது கிளம்பியது.
ராகுல் மேற்கொண்ட, 'பாரத் ஜோடோ' பாதயாத்திரைக்கும், அமெரிக்க பணம்தான் செலவழிக்கப்பட்டுள்ளதாம். இன்னொரு பக்கம் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எதிராக பத்திரிகைகளில் எழுத, சில சீனியர் பத்திரிகையாளர்களுக்கும், அமெரிக்க நிதி வழங்கப்பட்டுள்ளதாம்.
மோடி - -டிரம்ப் சந்திப்பு எதை சாதித்ததோ இல்லையோ, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிட்டது என்பதே உண்மை.

